நாங்குநேரி, பாளையங்கோட்டை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பு


நாங்குநேரி, பாளையங்கோட்டை தொகுதி  அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 12 March 2021 12:48 AM IST (Updated: 12 March 2021 12:48 AM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரி, பாளையங்கோட்டை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று பேட்டி அளித்தனர்.

நெல்லை:
நாங்குநேரி, பாளையங்ேகாட்டை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று பேட்டி அளித்தனர்.

உற்சாக வரவேற்பு

தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்  அறிவிக்கப்பட்டனர். அதில் நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை என்.கணேசராஜா,  பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில்அ.தி.மு.க. சார்பில் கே.ஜே.சி.ஜெரால்டு ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இவர்கள் 2 பேரும் நெல்லைக்கு வந்தனர். அவர்களுக்கு மாவட்ட எல்லையில் அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நெல்லை கோர்ட்டு அருகிலும், நெல்லை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அ.தி.மு.க. அலுவலகம் முன்பும் திரளான தொண்டர்கள் திரண்டு வந்து மாலை, சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பேட்டி

இதை தொடர்ந்து 2 தொகுதிகளின் வேட்பாளர்களும் கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது, தச்சை கணேசராஜா கூறியதாவது:- நாங்குநேரி தொகுதியை பொறுத்தவரை மக்களின் அன்றாட தேவையான சாலை வசதியில் தொடங்கி பல்வேறு பணிகள் அ.தி.மு.க. அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொகுதியில் வெற்றி வாய்ப்பு அதிக அளவில் இருக்கிறது. மேலும் தமிழக முதல்-அமைச்சர் அளித்த பொங்கல் பரிசு உள்பட பல்வேறு திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளது.

நாங்குநேரி தொகுதியில் வாழை விவசாயம் அதிகம் உள்ளது. இந்த வாழை விவசாயிகளை கருத்தில் கொண்டு மிகப்பெரிய தொழிற்கூடம் உருவாக்கப்படும். விஜயநாராயணபுரம் பெரிய குளம் பாதுகாக்கப்பட்டு தண்ணீரை சேமிக்கும் சிறு அணையாக உருவாக்கப்படும். இதுமட்டுமல்லாது மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் தண்ணீரை சேமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெறுவேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜெரால்டு

தொடர்ந்து ஜெரால்டு நிருபர்களிடம் கூறுகையில், 'கடந்த 25 ஆண்டுகளாக பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு எந்த பணிகளும் சென்றடையவில்லை. இதுவரை இருந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டுக்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்று சொல்லக்கூடிய பாளையங்கோட்டையில் அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி கொண்டுவரப்படவில்லை. இதற்காக நான் பாடுபடுவேன். இந்த பாளையங்கோட்டை தொகுதியை அ.தி.மு.க.வின் கோட்டை என்று பேசும் அளவுக்கு வெற்றி பெறுவேன்' என்றார். 

Next Story