வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்: நெல்லையில் பலத்த பாதுகாப்பு
சட்டமன்ற தேர்தலையொட்டி நெல்லை மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
நெல்லை:
சட்டமன்ற தேர்தலையொட்டி நெல்லை மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இன்று, வேட்புமனுதாக்கல்
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெறுகிறது இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமையை தவிர்த்து வருகிற 19-ந் தேதி வரையிலும் தினமும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 20-ந் தேதியும், வேட்புமனுக்களை திரும்ப பெற 22-ந்தேதியும் கடைசி நாள் ஆகும். நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, அம்பை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
நெல்லை தொகுதிக்கு உதவி கலெக்டர் சிவ கிருஷ்ணமூர்த்தி, அம்பை தொகுதிக்கு சேரன்மாதேவி உதவி கலெக்டர் பிரதீக் தயாள், பாளையங்கோட்டை தொகுதிக்கு நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், நாங்குநேரி தொகுதிக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் குழந்தைவேலு, ராதாபுரம் தொகுதிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலர் உஷா ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பலத்த பாதுகாப்பு
வேட்புமனு தாக்கலையொட்டி, நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நெல்லை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான நெல்லை உதவி கலெக்டர் அலுவலகம், ராதாபுரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகம், பாளையங்கோட்டை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான நெல்லை மாநகராட்சி ஆணையாளர் அலுவலகம், அம்பை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான சேரன்மாதேவி உதவி கலெக்டர் அலுவலகம், நாங்குநேரி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட வழங்கல் அலுவலர் அலுவலகம் ஆகியவற்றில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. அங்கு துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
வேட்புமனு தாக்கல் நடைபெறும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வேட்பாளருடன் கூடுதலாக 2 பேர் மட்டுமே செல்லலாம். வேட்புமனு தாக்கல் செய்ய வருகிறவர்கள் அதிகபட்சமாக 2 கார்களில் வருவதற்கு அனுமதிக்கப்படுவர். வேட்புமனு தாக்கல் செய்வது முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படும்.
மாதிரி வாக்குப்பதிவு
இதற்கிடையே நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்க்க கூடிய விவிபேட் எந்திரங்கள் ஆகியவை ராமையன்பட்டி குடோனில் இருந்து அந்தந்த தொகுதிகளில் உள்ள கருவூல அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளது. தபால் ஓட்டு பெறுவதற்கான பெட்டிகளும் அங்கு வைக்கப்பட்டு உள்ளது.
பாளையங்கோட்டை தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள், பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டு, மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு, அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பாளையங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு வாகனத்தில் மாதிரி வாக்குப்பதிவு குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story