2 ஆண்டுகளாக நாகர்கோவிலில் சுற்றி திரிந்தவர் குடும்பத்துடன் இணைந்தார்


2 ஆண்டுகளாக நாகர்கோவிலில் சுற்றி திரிந்தவர் குடும்பத்துடன் இணைந்தார்
x
தினத்தந்தி 12 March 2021 1:25 AM IST (Updated: 12 March 2021 1:25 AM IST)
t-max-icont-min-icon

காதல் பிரச்சினையால் மனநலம் பாதிக்கப்பட்டு 2 ஆண்டுகளாக நாகர்கோவிலில் சுற்றி திரிந்தவர் குடும்பத்துடன் இணைந்துள்ளார். பேஸ்புக் வீடியோ மூலமாக அவரை அடையாளம் கண்டுள்ளனர்.

நாகர்கோவில்:
காதல் பிரச்சினையால் மனநலம் பாதிக்கப்பட்டு 2 ஆண்டுகளாக நாகர்கோவிலில் சுற்றி திரிந்தவர் குடும்பத்துடன் இணைந்துள்ளார். பேஸ்புக் வீடியோ மூலமாக அவரை அடையாளம் கண்டுள்ளனர்.
மனநலம் பாதிக்கப்பட்டவர் 
புதுச்சேரியை சேர்ந்தவர் ஆனந்தம் (வயது 45). மனநலம் பாதிக்கப்பட்ட இவர், கடந்த 2 ஆண்டுகளாக நாகர்கோவிலில் சுற்றி திரிந்தார். பெரும்பாலும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக சாலையில் தான் ஆங்காங்கே அமர்ந்து இருப்பார். யாராவது கொடுக்கிற உணவை சாப்பிட்டுக் கொண்டு அந்த பகுதியிலேயே திரிந்தார். அவரது சொந்த ஊர் எது? குடும்பத்தினர் பற்றிய விவரங்கள் தெரியாமல் இருந்தது.
கொரோனா ஊரடங்கின்போது உணவு கிடைக்காமல் க‌‌ஷ்டப்பட்டு வந்த ஆனந்தம், தன்னார்வலர்களிடம் உணவு வாங்கி சாப்பிட்டுள்ளார். அந்த சமயத்தில் தினே‌‌ஷ் சங்கர் என்பவர் ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்கினார். அப்போது ஆனந்தமும் அவரிடம் உணவு வாங்கியுள்ளார். உணவு கொடுத்ததை தினே‌‌ஷ் சங்கர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளமான பேஸ்புக்கில் (முகநூல்) பதிவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. வீடியோவை ஏராளமானவர்கள் பார்த்தனர்.
வீடியோ பதிவு 
மேலும் ஆனந்தத்தின் உறவினர்களும் அந்த வீடியோவை பார்த்துள்ளனர். அப்போது வீடியோவில் இருப்பது ஆனந்தம் என்பதை அடையாளம் கண்டுகொண்டனர். இதனையடுத்து வீடியோவை பதிவிட்ட தினே‌‌ஷ் சங்கரை, ஆனந்தத்தின் குடும்பத்தினர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினர். மேலும் ஆனந்தம் எங்கு இருக்கிறார்? என்ற விவரங்களையும் சேகரித்துக்கொண்டனர்.
ஆனால் கொரோனா ஊரடங்கு காலமாக இருந்ததால் ஆனந்தத்தின் குடும்பத்தினரால் உடனடியாக நாகர்கோவில் வரமுடியவில்லை. எனவே நாங்கள் வரும் வரை ஆனந்தத்துக்கு உணவு கொடுத்து பத்திரமாக பார்த்துக்கொள்ளும்படி தினே‌‌ஷ் சங்கரிடம் கூறியுள்ளனர். அதன்படி அவரும் ஆனந்தத்தை கவனித்து வந்தார்.
ஆனந்த கண்ணீர்
இந்த நிலையில் ஆனந்தத்தின் தாயார் மற்றும் உறவினர்கள் என மொத்தம் 4 பேர் நேற்று கார் மூலம் நாகர்கோவில் வந்தனர். பின்னர் தினே‌‌ஷ் சங்கரை தொடர்பு கொண்டு ஆனந்தத்தை நேரில் பார்த்தனர். 
அப்போது ஆனந்தம் கிழிந்த ஆடையுடன் மிகவும் பரிதாபமாக இருந்தார். மகனின் நிலைமையை பார்த்து அவருடைய தாயார் கண்ணீர் வடித்தார். இருந்தாலும் நீண்ட நாட்களுக்கு பிறகு மகனை பார்த்த அவர் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தார்.
காதல் பிரச்சினை 
இதுபற்றி ஆனந்தத்தின் தாயாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
என் மகன் நன்றாக நடிப்பான். அதிலும் ரஜினி போல தத்ரூபமாக நடிப்பான். எனவே நடிக்க வாய்ப்பு கேட்டு சென்னை சென்றான். அங்கு ஒரு பெண்ணை காதலித்துள்ளான். எங்களுக்கு வசதி இல்லாத காரணத்தால் அந்த பெண்ணை என் மகனுக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்துவிட்டனர். எனினும் என் மகன் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள உறுதியாக இருந்தான்.
இதுதொடர்பாக அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று பேசினான். அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் என் மகனை அவனது காதலி வீட்டார் தாக்கினர். இதில் அவனுக்கு தலையில் காயம் ஏற்பட்டு மனநலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவன் அடிக்கடி வீட்டில் இருந்து வெளியேறி எங்காவது சென்றுவிடுவான். நாங்கள் அவனை தேடி கண்டுபிடித்து மீண்டும் வீட்டுக்கு அழைத்து செல்வோம்.
அழைத்து சென்றனர்
கடந்த 2 ஆண்டுகளாக அவன் எங்கு சென்றான்? என்பது தெரியாமல் வேதனையில் இருந்தோம். தற்போது பேஸ்புக் வீடியோ மூலமாக அவனை அடையாளம் கண்டுகொண்டோம்” என்றார்.
இதைத் தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள விடுதியில் ஆனந்தத்தை குளிக்க வைத்து அவரை புதுச்சேரிக்கு அழைத்து சென்றனர். இத்தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு அலுவலக பாதுகாப்பு போலீசார் ஆனந்தத்தை அழைத்து செல்ல உதவி செய்தனர்.

Next Story