மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை: குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு


மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை:  குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 12 March 2021 1:47 AM IST (Updated: 12 March 2021 1:47 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த பலத்த மழையால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது.

தென்காசி:

கோடைக்காலம் நெருங்குவதையொட்டி, தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்தது.

குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. இதேபோன்று பழைய குற்றாலம், புலியருவி ஆகியவற்றிலும் தண்ணீர் அதிகமாக விழுகிறது.

குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்ததால், அங்கு சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்று குளித்து மகிழ்ந்தனர்.
குற்றாலத்தில் பகல் முழுவதும் வெயிலே தெரியாதவாறு மேகமூட்டமாக ரம்மியமாக இருந்தது. மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோல் அச்சன்புதூர், கடையநல்லூர், வடகரை, இடைகால், சொக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது. 

Next Story