நெல்லை கோவில்களில் சிவராத்திரி விழா விடிய, விடிய பக்தர்கள் வழிபாடு
நெல்லை கோவில்களில் சிவராத்திரி விழா நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் விடிய, விடிய வழிபாடு நடத்தினர்.
நெல்லை:
நெல்லை கோவில்களில் சிவராத்திரி விழா நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் விடிய, விடிய வழிபாடு நடத்தினர்.
சிவராத்திரி விழா
மாசி மாதம் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. மகா சிவராத்திரி அன்று விரதம் மேற்கொண்டு சிவனை வழிபட்டால் நன்மை நடக்கும் என்பது ஐதீகம்.
அத்தகைய சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. நெல்லையில் பல்வேறு கோவில்களில் சிவராத்திரி விழா நடைபெற்றது.
நெல்லையப்பர் கோவில்
நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர்- காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. அங்கு உள்ள நந்தி முன்பு ருத்ராட்சங்கள் ஆன சிவலிங்கம் உருவாக்கப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இங்கு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் சுவாமி, அம்பாள் சன்னதிகளில் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
இதுதவிர அங்கு உள்ள மண்டபத்தில் 108 சிவலிங்கங்களை சிவனடியார்கள் வரிசையாக வைத்து விடிய, விடிய சிறப்பு வழிபாடு செய்தனர். மேலும் கோவில் முழுவதும் பக்தர்கள் இரவு முழுவதும் தங்கியிருந்து வழிபாடு நடத்தினர்.
திரிபுராந்தீஸ்வரர் கோவில்
இதேபோல் பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர் கோவில், மேலப்பாளையம் சொக்கநாதர் கோவில், மேலநத்தம் அக்னீஸ்வரர் கோவில், அழியாபதீஸ்வரர் கோவில், சந்திப்பு கைலாசநாதர் கோவில், சிந்துபூந்துறை மீனாட்சி சொக்கநாதர் கோவில், தச்சநல்லூர் சிவன் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் சிவராத்திரி பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெற்றது.
இதுதவிர சில அம்மன் கோவில்கள், குலதெய்வ கோவில்களிலும் சிவராத்திரி சிறப்பு வழிபாடு பூஜைகள் நடைபெற்றன. ஒரு சில கோவில்களில் பக்தர்களுக்கு ஓம் நமச்சிவாயா மற்றும் பக்தி வாசகங்கள் எழுதும் போட்டி நடத்தப்பட்டது. அதிக எண்ணிக்கையில் எழுதிய பக்தர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story