சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை


சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 12 March 2021 1:58 AM IST (Updated: 12 March 2021 1:58 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழாவையொட்டி நேற்று விடிய, விடிய 4 கால சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் விடிய, விடிய விழித்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

சிவகங்கை,

 சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழாவையொட்டி நேற்று விடிய, விடிய 4 கால சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் விடிய, விடிய விழித்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

மகா சிவராத்திரி விழா

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் வரும் சதுர்த்தசி மகா சிவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது. சிவனுக்கு உகந்த ராத்திரி என்பதால் சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவ வழிபாடு மேற்கொள்பவர்களுக்கு இம்மையில் வாழ்வும் மறுமையில் வீடுபேறும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இத்தகைய சிறப்பு பெற்ற மகா சிவராத்திரி விழா நேற்று கொண்டாடப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் மகா சிவராத்திரி விழாவையொட்டி நேற்று விடிய, விடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

விடிய, விடிய சிறப்பு பூஜைகள்

திருப்பத்தூர் திருத்தளி நாதர் கோவில், சிங்கம்புணரியை அடுத்த பிரான்மலையில் உள்ள மங்கை பாகர் தேனம்மை கோவில், காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவில், திருப்புவனத்தில் புஷ்பவனேசுவரர்-சவுந்திர நாயகி அம்மன் கோவில், சிவகங்கை காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவில், இளையாற்றங்குடி சுவாமி கைலாச நாதர் கோவில், மாத்தூர் ஐந்நூற்றீஸ்வரர் கோவில், இலுப்பைக்குடி தான்தோன்றி ஈசர் கோவில், பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் உள்ள திருவீசர், மருதீசர் சன்னதி, வைரவன்பட்டி வளரொளி நாதர் கோவில், நேமம் செயங்கொண்ட சோழீசர் கோவில், சூரக்குடி தேசிக நாதர் கோவில், இரணியூர் ஆட்கொண்ட நாதர் கோவில், வேலங்குடி கண்டீசுவரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன்கோவில்களில் நேற்று மகா சிவராத்திரி விழா நடைபெற்றது.
விழாவையொட்டி கோவில்கள் வாழை மரம், மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டது. மின்விளக்குகளால் கோவில் ஜொலித்தன. மாலை 6 மணிக்கு முதல்கால பூஜையும், இரவு 10 மணிக்கு 2-ம் கால பூஜையும், நள்ளிரவு 1 மணிக்கு 3-ம் கால பூஜையும், அதிகாலை 3 மணிக்கு 4 கால பூஜையும் நடைபெற்றன.

பக்தர்கள் தரிசனம்

மகா சிவராத்திரி விழாவையொட்டி சிவன் கோவில்களுக்கு ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். விடிய, விடிய தூங்காமல் சிவனின் பஞ்சாட்சர மந்திரமான நமசிவாய என சொல்லி பக்தி பரவசத்துடன் சாமி கும்பிட்டனர்.
சிவபுராணம் பாடியும், சிவபெருமானின் பக்தி பாடல்கள் பாடியும் பக்தர்கள் மகிழ்ந்தனர். காரைக்குடி சுப்பிரமணியபுரம் 2-வது வீதியில் உள்ள ஸ்ரீசத்யசாய் சேவா சமிதி கோவிலில் சிவராத்திரி விழாவையொட்டி நேற்று மாலை 6 மணி முதல் அதிகாலை 3 மணி வரை சிவலிங்கத்திற்கு பக்தர்களே அபிஷேகம் செய்து வழிபட்டனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. காரைக்குடி நகர சிவன் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சாமி தரிசனத்துக்கு நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். விடிய, விடிய கண்விழித்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Next Story