பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம்


பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம்
x
தினத்தந்தி 12 March 2021 2:04 AM IST (Updated: 12 March 2021 2:04 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை பெரியகோவிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தஞ்சாவூர்:
தஞ்சை பெரியகோவிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மகா சிவராத்திரி விழா 
மாமன்னன் ராஜராஜசோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய தஞ்சை பெரியகோவிலில் மகா சிவராத்திரி விழா நேற்றுஇரவு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்றுஇரவு முதல் இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை வரை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்றுஇரவு 10 மணிக்கு முதல் கால பூஜை நடைபெற்றது.
அப்போது பெருவுடையாருக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு 2-ம் கால பூஜையும், அதிகாலை 2 மணிக்கு 3-ம் கால பூஜையும், 4 மணிக்கு 4-ம் கால பூஜையும் நடைபெற்றது. ஒவ்வொரு காலத்திலும் பெருவுடையாருக்கு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இன்று காலை 5 மணி அளவில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதேபோல தஞ்சையில் உள்ள மற்ற சிவன்கோவில்களிலும் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பிரகன் நாட்டியாஞ்சலி 
மகா சிவராத்திரி விழாவையொட்டி தஞ்சை பெரியகோவிலில் பிரகன் நாட்டியாஞ்சலி விழா நேற்றுமாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற்றது. விழாவை திருச்சி வட்ட தொல்லியல்துறை கண்காணிப்பாளர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார். இதில் தஞ்சை முதுநிலை பராமரிப்பு அலுவலர் சங்கர், அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கிரு‌‌ஷ்ணன், தென்னக பண்பாட்டு மைய நிர்வாக அலுவலர் கிரு‌‌ஷ்ணமூர்த்தி, பிரகன் நாட்டியாஞ்சலி பவுண்டேசன் தலைவர் வரதராஜன், செயலாளர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் சென்னை, திண்டுக்கல், கோவை, லாலாஜாபேட்டை, திருச்சி, பட்டுக்கோட்டை, தஞ்சை ஆகிய பகுதிகளை சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்று பரதநாட்டியம் உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகளை நடத்தினர். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆண்டுதோறும் ஒரு வாரத்துக்கு நடைபெறும் பிரகன் நாட்டியாஞ்சலி விழா இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நேற்று ஒரு நாள் மட்டுமே நடைபெற்றது.

Next Story