குப்பை கொட்டச்சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு
பெரம்பலூரில் குப்பை கொட்டச்சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலிச்சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
பெரம்பலூர்:
தாலிச்சங்கிலி பறிப்பு
பெரம்பலூரில் எளம்பலூர் சாலையில் உள்ள முத்துநகர் 2-வது தெருவில் வசிப்பவர் சுந்தரபாண்டி. கார் டிரைவர். இவரது மனைவி கவிதா (வயது 33). நேற்று காலை கவிதா குப்பை கொட்டுவதற்காக சென்றபோது எளம்பலூர் பிரதான சாலையில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர், கவிதா அணிந்திருந்த 7 பவுன் தாலிச்சங்கிலியை பறிக்க முயன்றனர்.
உடனடியாக சுதாரித்துக்கொண்ட கவிதா, தாலிச்சங்கிலியை பிடித்துக்கொண்டார். இதில் சங்கிலி அறுந்து 2 பவுன் கவிதாவிடமும், 5 பவுன் மர்ம நபரின் கையிலும் சிக்கியது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவு
இது தொடர்பாக பெரம்பலூர் நகர போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சங்கிலியை பறித்த மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சி, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அதனைக்கொண்டு பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் மற்றும் போலீசார், மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூரில் வீடுகளில் திருட்டு சம்பவங்களும், தனியாக செல்லும் பெண்களிடம் தங்கச்சங்கிலி பறிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருவதால், பெண்கள் தெருவில் நடமாடுவதற்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story