கோவில்களில் மகாசிவராத்திரி விழா
அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மீன்சுருட்டி:
மகாசிவராத்திரி விழா
மகாசிவராத்திரியையொட்டி ஒவ்வொரு ஆண்டு சிவன் கோவில்கள் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். இதையொட்டி இரவு முதல் அதிகாலை வரை நான்கு கால பூஜைகள் நடைபெறும். மேலும் பக்தர்கள் விடிய, விடிய விழித்திருந்து சாமி தரிசனம் செய்வார்கள். நேற்று மகாசிவராத்திரி ஆகும். அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி விழாவையொட்டி முதல் காலபூஜை நேற்று மாலை 6 மணியளவில் தொடங்கியது. மஞ்சள், சந்தனம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
இரண்டாம் காலபூஜை இரவு 10 மணிக்கும், மூன்றாம் காலபூஜை நள்ளிரவு 1 மணிக்கும், நான்காம் கால பூஜை அதிகாலை 4 மணியளவிலும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் மீன்சுருட்டி கிராமத்தில் உள்ள சொக்கலிங்கேஸ்வரர் கோவிலில் நான்கு காலபூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேல அகத்தீஸ்வரர் கோவில்
இதேபோல் ஆண்டிமடத்தில் விளந்தையில் உள்ள தர்மசம்வர்த்தினி சமேத மேல அகத்தீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மாணவிகளின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கலசங்கள், 108 சங்குகளில் புனித நீர் ஊற்றி சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சந்தனம், மஞ்சள், விபூதி, திரவியப்பொடி, இளநீர், பால், தயிர், தேன் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, கலசாபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. பல்வேறு பூக்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து நான்கு கால பூஜை நடைபெற்றது. பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்திருந்து சிவனை வழிபட்டனர். இதில் ஆண்டிமடம்-விளந்தை மற்றும் அதனை சுற்றியுள்ள பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தா.பழூர்
தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியப் பொடி, வில்வப் பொடி, அருகம்புல் பொடி, பால், தயிர், சந்தணம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து காட்சி தந்தார். திருமுறைகள், சிவபுராணம் முழங்க கோவிலில் நான்கு கால அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு சிவராத்திரி வழிபாட்டு குழுவினர் ஏற்பாடு செய்தனர். இதேபோல் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி சவுந்திரநாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில், கோடாலிகருப்பூர் மீனாட்சி அம்மன் உடனுறை சுந்தரேஸ்வரர் கோவில், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் சுவாமி, அம்பாளுக்கு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
Related Tags :
Next Story