கோவில்களில் மகாசிவராத்திரி விழா
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பெரம்பலூர்:
மகாசிவராத்திரி விழா
மகாசிவராத்திரியையொட்டி ஒவ்வொரு ஆண்டு சிவன் கோவில்கள் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். இதையொட்டி இரவு முதல் அதிகாலை வரை நான்கு கால பூஜைகள் நடைபெறும். மேலும் பக்தர்கள் விடிய, விடிய விழித்திருந்து சாமி தரிசனம் செய்வார்கள். நேற்று மகாசிவராத்திரி ஆகும். இதையொட்டி பெரம்பலூரில் உள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று இரவு தொடங்கி 4 காலத்திற்கும் மூலவருக்கு வாசனை திரவியங்கள், பால் பொருட்கள், இளநீர் உள்ளிட்ட சோடஷ அபிஷேக பொருட்களை கொண்டு மகாஅபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. பூஜைகளை திருச்செங்கோடு சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார் குழுவினர் நடத்தினர். இதில் தினசரி, வார வழிபாட்டுக்குழுவினர் மற்றும் சிவனடியார்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
துறைமங்கலத்தில் உள்ள மீனாட்சி சமேத சொக்கநாதர் கோவிலில் ருத்ரயாகம் மற்றும் அபிேஷக, ஆராதனைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். செட்டிகுளத்தில் உள்ள குபேர தலமான காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேசுவரர் கோவில், வெங்கனூர் விருத்தாசலேஸ்வரர் கோவில், வாலிகண்டபுரம் வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் கோவில், எஸ்.ஆடுதுறை குற்றம்பொறுத்தஈஸ்வரர் (அபராதரட்சகர்) கோவில், திருவாலந்துறை தோளீஸ்வரர் கோவில், ஆகிய சிவன் கோவில்களில் மகாசிவராத்திரி விமரிசையாக கொண்டாடப்பட்டது.
காகன்னை ஈஸ்வரர் கோவில்
பெரம்பலூரை அடுத்த எளம்பலூரில் பிரம்மரிஷிமலை அடிவாரத்தில் உள்ள நளினாம்பிகை உடனுறை காகன்னை ஈஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி விழா கோபூஜை, அஸ்வ பூஜை, ருத்ரபூஜையுடன் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு ரோகிணிமாதாஜி தலைமை வகித்தார். இளம்தவயோகி தவசிநாதன், சுந்தரமகாலிங்கம் ஆகியோர் பூஜைகளை நடத்தினர். மலைஉச்சியில் அதிர்வேட்டுகள், வாணவேடிக்கைகள் முழங்க 2 மகாதீபங்கள் ஏற்றப்பட்டு 210 சித்தர்கள் வேள்வி, ருத்ரஜெபம், ருத்ரவேள்விகள் நடந்தன. பூரண கும்பம் வைக்கப்பட்டு கலசவழிபாடும், 108 சங்காபிசேகமும், ஒவ்வொரு கால யாகசாலைபூஜை முடிவடைந்துடன் மூலவருக்கு அபிசேகங்களும், பன்னிரு திருமுறைகள், சிவபுராண பாராயணத்துடன் மகாதீபாராதனை நடந்தது. இதில் தொழில்அதிபர்கள், வழக்கறிஞர்கள், சிவத்தொண்டர்கள், தவயோகிகள் மற்றும் சென்னை, திருவாரூர், திருச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளை சேர்ந்ததிரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதான நிகழ்ச்சி நடந்தது.
ருத்ர யாகம்
இதேபோல வடக்குமாதவி சாலையில் சமத்துவபுரம் அருகே உள்ள மகாலிங்க சித்தர் சுவாமிகள் அதிஷ்டானத்திலும், பெரம்பலூர் புதிய பஸ்நிலையம் அருகேஉள்ள காகபுஜண்டர் தலையாட்டி சித்தர் சுவாமிகளின் மடத்திலும் சிவராத்திரியை முன்னிட்டு ருத்ரவேள்விகள், ருத்ரஜெபவழிபாடும் விடியவிடிய நடந்தது. பெரம்பலூரை அடுத்துள்ள குரும்பலூர் பேரூராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீதர்மசம்வர்தினி சமேத பஞ்சநதீஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 4 கால யாகசாலை பூஜைகளை கோவில் அர்ச்சகர் சிவசுப்ரமணியன் சிவாச்சாரியார் குழுவினர் நடத்தினர். இதில் குரும்பலூர், ஈச்சம்பட்டி, பாளையம், செஞ்சேரி, கீழக்கணவாய், புதூர், மேட்டாங்காடு மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பெண்கள் கலந்துகொண்டனர்.
எசனையில் உள்ள ஞானாம்பிகை சமேத காலத்தீஸ்வரர் கோவில், அம்மாபாளையம்அருணாசலேஸ்வரர் கோவில், நக்கசேலம் துவாரகாபுரீஸ்வரர் கோவில், து.களத்தூர் விஸ்வநாதசுவாமி கோவில், குன்னம் ஆதிகும்பேஸ்வரர் கோவில், வேப்பூர் அருணாசலேஸ்வரர்கோவில், தொண்டமாந்துறை காசிவிஸ்வநாதர் கோவில், வெங்கலம் தாராபுரீஸ்வரர் கோவில் உள்பட முக்கிய சிவாலயங்களில் சிவராத்திரி விழா விமரிசையாக நடந்தது. பெரம்பலூரில் கலெக்டர் அலுவலக சாலையில் மேற்கு அபிராமபுரத்தில் உள்ள பெத்தநாச்சி அம்மன் உடனுறை ஸ்ரீபொன்னம்பல எமாபுரீஸ்வரர், ஸ்ரீகல்லணையான் கோவிலில் மகாசிவராத்திரியையொட்டி ருத்ரஹோமம், சித்தருக்கு சிறப்பு அபிசேகமும், சித்தர் சிவபூஜை, லிங்கோற்பவ காட்சி, பஞ்சலிங்க தரிசனம், உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் அம்மன் நகர், சுந்தர்நகர், அபிராமபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story