பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழாவில் பூசாரி மட்டுமே தீ மிதிக்க அனுமதி; அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழாவை முன்னிட்டு கோவில் பூசாரி மட்டுமே தீ மிதிக்க அனுமதிக்கப்படுவார் என அதிகாரிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது
சத்தியமங்கலம்
பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழாவை முன்னிட்டு கோவில் பூசாரி மட்டுமே தீ மிதிக்க அனுமதிக்கப்படுவார் என அதிகாரிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பண்ணாரி அம்மன் கோவில்
சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் விழா சிறப்பாக நடைபெறும். இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி தங்களுடைய நேர்த்திக்கடனை ெசலுத்துவார்கள்.
கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா நடைபெறவில்லை.
வருகிற 15-ந் தேதி...
இந்த ஆண்டு குண்டம் விழா வழக்கம் போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. விழாவானது வருகிற 15-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான குண்டம் விழா வருகிற 30-ந் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆர்.டி.ஓ. பழனிதேவி தலைமை தாங்கினார். இதில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் பரம்பரை அறங்காவலர்கள், போலீஸ் துறை, வருவாய்த்துறை, வனத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பூசாரிக்கு அனுமதி
கூட்டத்தில், ‘குண்டம் விழாவில் பூசாரி மட்டுமே தீ மிதிக்க அனுமதிக்கப்படுவார். குண்டம் இறங்கிய உடன் அதை மூடிவிடவேண்டும். கண்டிப்பாக குண்டம் இறங்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை. சிறப்பு பஸ்கள் இயக்க அனுமதி கிடையாது. கடைகள், ராட்டினம், கேளிக்கை கடைகள் அமைக்கவும் பாட்டு கச்சேரிகள் நடத்தவும் அனுமதி இல்லை. ஏற்கனவே உள்ள கடைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். எந்தவித கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி கிடையாது. சாமி தரிசனம் செய்த உடனே பக்தர்களை அனுப்பி விட வேண்டும். மின்சாரம், தண்ணீர் வசதி தடையில்லாமல் இருக்க வேண்டும்,’ என முடிவு செய்யப்பட்டது.
Related Tags :
Next Story