மின்சார வசதி கேட்டு மின்வாரிய அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள்; அதிகாரி பேச்சுவார்த்தைக்கு பின்னர் கலைந்து சென்றனர்


மின்சார வசதி கேட்டு மின்வாரிய அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள்; அதிகாரி பேச்சுவார்த்தைக்கு பின்னர் கலைந்து சென்றனர்
x
தினத்தந்தி 12 March 2021 4:04 AM IST (Updated: 12 March 2021 4:04 AM IST)
t-max-icont-min-icon

மின்சார வசதி கேட்டு மின்வாரிய அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள் அதிகாரி பேச்சுவார்த்தைக்கு பின்னர் கலைந்து சென்றனர்.

ஈரோடு
ஈரோடு மாயபுரம் அன்னை தெரசா நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் உள்ள தலைமை மின் பொறியாளர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அதிகாரிகளை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார்கள். அதில், ஈரோடு மாயபுரம் அன்னை தெரசா நகரில் 160 குடும்பத்தினர் 2011-ம் ஆண்டில் இருந்து வசித்து வருகின்றனர். அனைவரும் கூலி தொழிலாளர்கள். எங்கள் பகுதியில் குடிநீர், வீடுகளுக்கு மின் வசதி மற்றும் கழிப்பறை போன்ற எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. இதுகுறித்து பல முறை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து இருக்கிறோம். இந்நிலையில், மின்வசதி ஏற்பாடு செய்ய மாநகராட்சி நிர்வாகம் மூலம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மின்வாரியத்திற்கு செலுத்தப்பட்டதாக தெரிவித்து இருந்தனர். தொகை செலுத்தி 2 ஆண்டுகள் ஆகியும் மின்சார வசதி செய்யப்படவில்லை. ஈரோடு தாசில்தார் மூலம் தற்காலிக மின் வசதி செய்து தர மின்வாரியத்தினருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், மின்வாரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக மின்வசதி செய்யவில்லை என்றால் ரேஷன் கார்டு, ஆதார் கார்டுகளை ஒப்படைப்போம் என்று கூறினார்கள்.
அவர்களிடம் மின்சாரவாரிய நகரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்ட அவர், தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாகவே பணிகள் செய்ய முடியவில்லை. தேர்தல் முடிந்ததும் தாமதம் இன்றி உடனடியாக மின்சார இணைப்பு வழங்கப்படும் என்று கூறினார். அவரது விளக்கத்தை ஏற்று பொதுமக்கள் கோரிக்கை மனுவை வழங்கிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story