சுங்குவார்சத்திரம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி மின்கம்பி அறுந்து விழுந்ததால் பரிதாபம்
மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
ஸ்ரீபெரும்புதூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தை அடுத்த எச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜாக்கப் (வயது 45). கூலிதொழிலாளி. இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ஜாக்கபின் மனைவி 2 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். தன்னுடைய உறவினர் உதவியுடன் குழந்தைகளை வளர்த்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று ஜாக்கப் வேலை முடித்து மாலை வீட்டுக்கு வந்தார். பின்னர் வீட்டின் வெளியில் நாற்காலியில் அமர்ந்து இருந்தார். அப்போது மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பி திடீர் என அறுந்து கீழே நாற்காலியில் அமர்ந்து இருந்த ஜாக்கப் மீது விழுந்தது.
இதில் ஜாக்கப் மின்சாரம் தாக்கி உடல் கருகி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்சாரம் தாக்கி பலியான ஜாக்கப் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின்சார வாரியம் முறையாக பராமரிப்பு பணியை மேற்கொண்டிருந்தால் இது போன்று உயிர் பலி ஏற்பட்டிருக்காது. இனிமேலாவது மின்துறை ஊழியர்கள் விழிப்புடன் செயல்பட்டு அவர்கள் பணியை முறையாக செய்து வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story