கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் எந்த கட்டுப்பாடும் கடைபிடிக்க தேவையில்லை அரசு ஆஸ்பத்திரி டீன் முருகேசன் தகவல்
கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் எந்த வித கட்டுப்பாடும் கடைபிடிக்க தேவையில்லை என்று அரசு ஆஸ்பத்திரி டீன் முருகேசன் கூறினார்.
சேலம்,
கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக மக்களை ஆட்டிப்படைக்க தொடங்கிய கொரோனா வைரஸ் ஒரு ஆண்டாக மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் தமிழகத்தில் ஏராளமானவர்கள் உயிர் இழந்து உள்ளனர். ஆரம்ப கட்டத்தில் இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வில்லை.
தற்போது கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி மாநிலம் முழுவதும் முதல் கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள், பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதையொட்டி சேலம் மாவட்டத்திலும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
தற்போது 2-ம் கட்டமாக அனைத்து தரப்பினருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்ற தகவல் பொதுமக்களிடம் பரவலாக பரவி உள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு மக்களிடம் பீதி ஏற்பட்டு உள்ளது.
குறிப்பாக மதுஅருந்துபவர்கள் இடையே பெரும் பீதி ஏற்பட்டு உள்ளது. அதாவது குடிப்பழக்கம் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டால், 28 நாளைக்கு மது அருந்த கூடாது என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் கடைபிடிக்க வேண்டும் என்று பீதி அடைந்து உள்ளனர். மேலும் உணவு பழக்க வழக்கத்திலும் சில கட்டுப்பாடுகள் கடைபிடிக்க வேண்டும் என்ற தகவல்கள் பரவி வருகின்றன.
இது குறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் முருகேசனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டவர்கள் எந்த கட்டுப்பாடும் கடைபிடிக்க தேவையில்லை. எந்த ஒரு தடுப்பூசி போட்டாலும் சிலருக்கு காய்ச்சல் ஏற்படும். அதே போன்று தான் கொரோனா தடுப்பூசி போட்ட ஒரு சிலருக்கு காய்ச்சல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் மட்டும் உணவு உள்பட சில கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் நிலை ஏற்படும்.
எனவே அனைத்து தரப்பு மக்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வரவேண்டும். ஒவ்வொரு நாளும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் அதிகம் பேர் வரவேண்டும். இதற்காக தலைமை மருத்துவமனை, நகர்ப்புறம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story