தண்டையார்பேட்டையில் கோவிலை இடிக்க எதிர்ப்பு; பொதுமக்கள் சாலை மறியல்
தண்டையார்பேட்டையில் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி விநாயகர் கோவிலை இடிக்க வந்த மண்டல அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள், கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பூர்,
சென்னை தண்டையார்பேட்டை சுந்தரம்பிள்ளை நகரில் சுந்தர விநாயகர் கோவில் உள்ளது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் கட்டப்பட்டது. அந்த பகுதி பொதுமக்கள், இந்த கோவிலில் சாமி கும்பிட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் அந்த பகுதியில் வசிக்கும் தனிநபர் ஒருவர், பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் அமைந்துள்ள அந்த விநாயகர் கோவிலை அகற்ற வேண்டும் என ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இதுபற்றி சென்னை மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் பட்சத்தில் கோவிலை இடித்து அகற்றும்படி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று தண்டையார்பேட்டை மண்டல 38-வது வார்டு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள விநாயகர் கோவிலை இடித்து அகற்ற நடவடிக்கை எடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி பொதுமக்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.
ஐகோர்ட்டு உத்தரவுபடி தாங்கள் கோவிலை இடிக்க வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் பொதுமக்கள், கோவிலை இடிக்க கூடாது என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் தண்டையார்பேட்டை போலீஸ் உதவி கமிஷனர் ஜூலியஸ் சீசர், போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாவிஷ்ணு தலைமையில் ஆர்.கே.நகர் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் கோவிலை இடிக்காமல் மண்டல அதிகாரிகள் திரும்பிச்சென்றனர்.
Related Tags :
Next Story