சைதாப்பேட்டையில், தீயில் உடல் கருகி இளம்பெண் சாவு - கணவர், குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை
சைதாப்பேட்டையில் தீயில் உடல் கருகிய இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கணவர், குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை,
சென்னை சைதாப்பேட்டை மேற்கு ஜோன்ஸ் சாலையை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 29). இவர் வீட்டுக்கு எதிரே இனிப்பு கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி கண்ணகி (28). இவர்களுக்கு கவி வர்ஷன் (5) மற்றும் நட்சத்திரா (2) ஆகிய 2 குழந்தைகள் உள்ளன.
ராஜ்குமார் நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு குடும்பத்துடன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவு 1.30 மணியளவில் ராஜ்குமார் வீட்டில் இருந்து பயங்கரமாக அலறல் சத்தம் கேட்டதால் வீட்டின் உரிமையாளர் ராமசாமி உடனடியாக அவரது வீட்டுக்கு சென்று பார்த்தார்.
அப்போது கண்ணகி, ராஜ்குமார் மற்றும் அவர்களது குழந்தைகள் என 4 பேரும் பலத்த தீ காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அங்கிருந்தவர்கள் உதவியுடன் 4 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். இதில் கண்ணகி, சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
ராஜ்குமாரின் கை, கால் மற்றும் முகத்தின் வலதுபுறம் பலத்த தீ காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் 2 குழந்தைகளின் கை, கால்களிலும் தீ காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து குமரன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் தற்கொலைக்கு முயன்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story