புதிய பெட்டிகளுடன் மலைரெயில் சோதனை ஓட்டம்
மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே புதிய பெட்டிகளுடன் மலைரெயில் சோதனை ஓட்டம் நடந்தது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபோது, கடந்த 1908-ம் ஆண்டு முதல் மலைரெயிலை இயக்க தொடங்கினர். மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு ஒரு முறை, குன்னூர்-ஊட்டி இடையே தலா 3 முறை என தினமும் மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
தற்போது கொரோனா பரவல் காரணமாக முன்பதிவு செய்பவர்கள் மட்டும் மலைரெயிலில் பயணிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஊட்டியை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் ஒரு முறையாவது மலைரெயிலில் பயணிக்க வேண்டும் என்று ஆர்வம் காட்டுகின்றனர்.
அவர்கள் வளைந்து நெளிந்து செல்லும் குகைகள், அடர்ந்த வனப்பகுதிகள், வனவிலங்குகள், பசுமையான தேயிலை தோட்டங்களை கண்டு ரசிக்கின்றனர்.
இந்தநிலையில் சுற்றுலா பயணிகள் தங்கு தடையின்றி மலைகளை மோதி செல்லும் மேகக்கூட்டங்கள் உள்பட இயற்கை எழில் மிகுந்த காட்சிகளை கண்டு ரசிக்கும் வகையில் 4 புதிய ரெயில் பெட்டிகள் சென்னை ஐ.சி.எப்.-ல் தயாரிக்கப்பட்டது.
அவை அங்கிருந்து மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ராட்சத கிரேன் மூலம் ரெயில் தண்டவாளத்தில் பெட்டிகள் நிறுத்தப்பட்டது. பின்னர் புதிய 4 பெட்டிகள் பழைய என்ஜினில் இணைக்கப்பட்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டி வரை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
இந்த புதிய பெட்டிகளில் இருபக்கவாட்டிலும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டு உள்ளது. பழைய பெட்டிகளில் ஜன்னல்கள், கதவுகள் இருந்ததால், ஜன்னல் வழியே மட்டும் இயற்கை காட்சிகளை பார்க்க முடியும். தற்போது பக்கவாட்டு முழுவதும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டு உள்ளதால், இயற்கை காட்சிகளை எளிதில் கண்டு ரசிக்க முடியும்.
தொடர்ந்து பெட்டிகள் மேட்டுப்பாளையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. வருகிற கோடை சீசனில் சுற்றுலா பயணிகளுக்காக அந்த 4 புதிய பெட்டிகளுடன் மலைரெயில் இயக்கப்பட உள்ளது என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story