நிலக்கோட்டை தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
நிலக்கோட்டை தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கக்கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நிலக்கோட்டை:
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தொகுதிவாரியாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அதன்படி தி.மு.க. கூட்டணியில் நிலக்கோட்டை தொகுதி, மக்கள் விடுதலை கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் காங்கிரசார் மத்தியில் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. நிலக்கோட்டை தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில் நிலக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு உள்ள சங்கரன் சிலை முன்பு காங்கிரஸ் கட்சியின் நத்தம் தொகுதி தலைவர் பிரபாகர் தலைமையில் காங்கிரசார் திரண்டனர். அப்போது அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல் தேவதாசன் மற்றும் போலீசார் அங்கு வந்து, அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என்று தடுத்தனர். இதையடுத்து காங்கிரசார் அங்கிருந்து நால்ரோடு வரை ஊர்வலமாக சென்று, நிலக்கோட்டை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது, நிலக்கோட்டை தொகுதி காங்கிரசின் கோட்டையாகும். எனவே தொகுதி பங்கீட்டை மறுபரிசீலனை செய்து நிலக்கோட்டை தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். மகிளா காங்கிரஸ் மாநில தலைவி ஜான்சிராணியை நிலக்கோட்டையில் போட்டியிட செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story