காங்கிரஸ் அலுவலகத்தை பா.ஜ.க. மகளிரணியினர் முற்றுகையிட முயற்சி
திண்டுக்கல்லில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தை பா.ஜ.க. மகளிரணியினர் முற்றுகையிட முயன்றனர்.
திண்டுக்கல்:
அரியானா மாநில முன்னாள் முதல்-மந்திரியான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பூபேந்திரசிங் ஹீடா மகளிர் தினத்தன்று பெண்களை மாட்டுவண்டி இழுக்க வைத்து ஊர்வலம் நடத்தியுள்ளார். இதற்கு தமிழக பா.ஜ.க. மகளிரணியினர் கடும் கண்டனம் தெரிவித்து, காங்கிரஸ் கட்சி அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தை பா.ஜ.க. மகளிரணியினர் நேற்று முற்றுகையிட முயன்றனர். முன்னதாக பா.ஜ.க. மாவட்ட மகளிரணி பொதுச்செயலாளர் மோனிகா தலைமையில் மகளிரணியினர் திண்டுக்கல் பஸ் நிலையத்துக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து காங்கிரஸ் கட்சி அலுவலகம் நோக்கி அவர்கள் ஊர்வலமாக சென்று முற்றுகையிட முயன்றனர். இதற்கிடையே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பா.ஜ.க. மகளிரணியினரை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஹரியானா மாநில முன்னாள் முதல்-மந்திரியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் சிறிது நேரத்துக்கு பிறகு அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story