திருப்பூரில் உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 4¾ டன் அரிசி பறிமுதல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை


திருப்பூரில் உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 4¾ டன் அரிசி பறிமுதல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 12 March 2021 10:03 PM IST (Updated: 12 March 2021 10:03 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் உரிய ஆவணம் இன்றி டெம்போவில் கொண்டுவரப்பட்ட 4¾ டன் அரிசியை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர்
திருப்பூரில் உரிய ஆவணம் இன்றி டெம்போவில் கொண்டுவரப்பட்ட 4¾ டன் அரிசியை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை 
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 24 பறக்கும் படை அதிகாரிகள், வீடியோ கண்காணிப்பாளர்கள், தேர்தல்நிலை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
அரசியல் கட்சியினர் பொதுமக்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணம் கொடுக்க வாய்ப்புள்ளது என்பதால் திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். இந்த நிலையில் திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட எஸ்.ஏ.பி. சிக்னல் பகுதியில் பறக்கும் படை அதிகாரி மாரியப்பன் தலைமையில், சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமு மற்றும் போலீசார் சதீஷ்குமார், சையது யூசப் உள்ளிட்ட குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
4¾ டன் அரிசி பறிமுதல் 
அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி லாரியை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். இதனை பெருந்தொழுவை சேர்ந்த கொசுரா (வயது 36) என்பவர் ஓட்டி வந்தார். குமார் நகருக்கு செல்வதற்காக மினி லாரி வந்துள்ளது. மினி லாரியை சோதனை செய்ததில் மூட்டை, மூட்டையாக அரிசி இருந்தது. இதற்கான ஆவணத்தை அதிகாரிகள் கேட்டனர்.
அப்போது டிரைவரிடம் இதற்கான ஆவணம் இல்லை. இதனால் 252 மூட்டைகளில் இருந்த  சுமார் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 4 ஆயிரத்து 750 கிலோ அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, திருப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு கொண்டு வந்து ஒப்படைத்தனர். ஆவணத்தை காண்பித்து அரிசியை பெற்றுச்செல்லும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

Next Story