நாகை சாமந்தான்பேட்டை மீனவர்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு


நாகை சாமந்தான்பேட்டை மீனவர்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு
x
தினத்தந்தி 12 March 2021 10:33 PM IST (Updated: 12 March 2021 10:33 PM IST)
t-max-icont-min-icon

மீன்பிடி துறைமுகம் அமைக்காததை கண்டித்து நாகை சாமந்தான்பேட்டை மீனவர்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

நாகப்பட்டினம்:
மீன்பிடி துறைமுகம் அமைக்காததை கண்டித்து நாகை சாமந்தான்பேட்டை மீனவர்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
வேலை நிறுத்த போராட்டம் 
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2015-ம் ஆண்டு சட்டசபையில் 110 விதியின் கீழ் நாகை அருகே சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தில் மீன்பிடிதுறைமுகம் அமைக்கப்படும் என அறிவித்தார். ஆனால் அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் துறைமுக கட்டுமான பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மீனவர்கள் சட்டசபை தேர்தல் உள்பட அனைத்து தேர்தல்களையும் புறக்கணிக்க போவதாக அறிவித்து கடந்த டிசம்பர் மாதம் 21-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாகை தாலுகா மீனவர்களும் போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர். இதையடுத்து மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கலெக்டர் ஆகியோர் சாமந்தான்பேட்டை பஞ்சாயத்தார்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் கடந்த டிசம்பர் மாதம் 26-ந்தேதி வேலை நிறுத்த போராட்டம் மற்றும் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது.
தேர்தல் புறக்கணிப்பு 
இந்த நிலையில் மீன்பிடி துறைமுகம் அமைக்காததை கண்டித்து சட்டசபை தேர்தலை புறக்கணிப்பதாக மீண்டும் சாமந்தான்பேட்டை மீனவ பஞ்சாயத்தார்கள் அறிவித்துள்ளனர். மேலும் தங்களது மீனவ கிராமத்தில் அறிவிப்பு பேனர்கள் வைத்துள்ளனர்.
இதுகுறித்து சாமந்தான்பேட்டை மீனவ பஞ்சாயத்தார்கள் கூறியதாவது:- 
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2015-ம் ஆண்டு சட்டசபையில் சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என அறிவித்தார். ஆனால் 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணியை தொடங்காததால் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோம்.
இதைதொடர்ந்து அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டங்களை வாபஸ் பெற்றோம். ஆனால் மீன்பிடி துறைமுகம் அமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் நாகை தொகுதி எம்.எல்.ஏ தமீமுன்அன்சாரியுடன், சாமந்தான்பேட்டை மீனவ பஞ்சாயத்தார்கள் கடந்த மாதம் சென்னை சென்றனர். அங்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் வருகிற சட்டசபை தேர்தலை புறக்கணிப்பது என முடிவு செய்துள்ளோம்.
இதுதொடர்பாக எங்கள் கிராமத்தில் பேனர்கள் வைத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story