கடலூர் அருகே தீ விபத்து பட்டாசு தொழிற்சாலை வெடித்துச் சிதறியது கட்டிடம் தரைமட்டமானது
பட்டாசு தொழிற்சாலை வெடித்துச் சிதறியது
நெல்லிக்குப்பம்,
கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி அருகே நல்லப்பரெட்டிபாளையத்தில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள ஒரு தென்னந்தோப்பில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை இயங்கி வந்தது. நேற்று முன்தினம் வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசுகளை தயாரித்து வைத்து விட்டு, மாலையில் வீடுகளுக்கு சென்று விட்டனர். மேலும் அங்கு பட்டாசுகள் தயாரிக்க வெடி மருந்து உள்ளிட்ட பொருட்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை பட்டாசு தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் மற்றும் வெடி பொருட்கள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிக்கத் தொடங்கியது. சுமார் 10 நிமிடம் தொடர்ச்சியாக பட்டாசுகள் வெடித்ததில், பட்டாசு தொழிற்சாலை கட்டிடம் முழுவதும் இடிந்து தரைமட்டமாக காட்சி அளித்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இதுபற்றி கடலூர் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும், ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கடலூர் தாசில்தார் பலராமன், வருவாய் ஆய்வாளர் அகிலன் மற்றும் ரெட்டிச்சாவடி இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வெடிவிபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கிளிஞ்சிக்குப்பத்தை சேர்ந்த சீத்தாராமன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை என்பதும், கோவில் திருவிழாவுக்காக 2 மூட்டைகளில் பட்டாசுகளை தயாரித்து வைத்திருந்ததும், மேலும் பட்டாசு தயாரிப்பதற்காக குறிப்பிட்ட அளவில் வெடிமருந்து வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டாசு தொழிற்சாலை ஊருக்கு ஒதுக்குமாக இருந்ததாலும், அதிகாலை நேரத்தில் பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறியதாலும் பெரிய அளவிலான அசம்பாவிதமும், உயிர்சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story