கரூர் மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது
சட்டமன்ற தேர்தலையொட்டி கரூர் மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியது.
கரூர்
வேட்புமனு தாக்கல்
தமிழகத்தில் ஒரே கட்டமாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி நேற்று முதல் வருகிற 19-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்திலும், கரூர் சட்டமன்ற தொகுதிக்கு கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு குளித்தலை சார் ஆட்சியர் அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையொட்டி கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய முன்னேற்பாட்டு பணிகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தன.
முதல் வேட்புமனு
காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் ஆரம்பமானது. முதல் நாளான நேற்று சுமார் 12.30 மணியளவில் சாமானிய மக்கள் நலக்கட்சியை சேர்ந்த சண்முகம் வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் தனது வேட்புமனுவை கரூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்பிரமணியனிடம் அளித்தார்.
குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி ெதாகுதியில் நேற்று ேவட்புமனு தாக்கல் செய்ய யாரும் முன்வரவில்லை.
15-ந்தேதி முதல் சூடுபிடிக்கும்
ஏனெனில் அ.தி.மு.க.வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற 15-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். அன்றைய தினமே அ.தி.மு.க. வேட்பாளர்களும் தங்களது தொகுதிகளில் வேட்புமனுதாக்கல் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க.வில் நேற்று மதியம் தான் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதனால் அவர்களும் வேட்புமனு தாக்கல் செய்ய முடியவில்லை. வருகிற 15-ந்தேதி முதல் வேட்புமனு தாக்கல் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story