5 சட்டசபை தொகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது: முதல் நாளில் 3 பேர் வேட்புமனு தாக்கல்


5 சட்டசபை தொகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது:  முதல் நாளில் 3 பேர் வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 13 March 2021 12:43 AM IST (Updated: 13 March 2021 12:43 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளில் 3 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தனர்.

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளில் 3 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தனர். 

வேட்புமனு தாக்கல்

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, நெல்லை, அம்பை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

இந்த தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. நெல்லை சட்டசபை தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் நெல்லை உதவி கலெக்டர் அலுவலகம், பாளையங்கோட்டை தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களிலும், பாளையங்கோட்டை தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் நெல்லை மாநகராட்சி அலுவலகம், பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்திலும் நடந்தது. 

அம்பை தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் செய்ய கூடிய இடம் சேரன்மாதேவி உதவி கலெக்டர் அலுவலகம், அம்பை தாலுகா அலுவலகம் ஆகும். நாங்குநேரி தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் இடம் நாங்குநேரி தாலுகா அலுவலகம், ராதாபுரம் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் செய்யக் கூடிய இடம் ராதாபுரம் தாலுகா அலுவலகம் ஆகும். இந்த இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.

3 பேர் மனு தாக்கல்

வேட்புமனு தாக்கல் செய்யக்கூடிய இடத்தில் இருந்து 100 மீட்டருக்கு உள்ளே வேட்பாளர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

நெல்லை சட்டசபை தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் நயினார் நாகேந்திரனும், நாம் இந்தியர் கட்சி சார்பில் பேட்டையை சேர்ந்த காமாட்சிநாதனும் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். நெல்லை தொகுதியில் முதல் நாளன்று இரண்டு பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

ராதாபுரம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளரான அந்தோணி ரோஸ்சாரி  வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். பாளையங்கோட்டை, நாங்குநேரி, அம்பை ஆகிய தொகுதிகளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. ஆனால் அங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்புமனு பெறப்படும் நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய முககவசம் அணிந்து தேர்தல் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நெல்லை உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.



Next Story