அரசியல் அதிக லாபம் ஈட்டும் தொழிலாக மாறிவிட்டது தர்மபுரியில் சீமான் பேச்சு


அரசியல் அதிக லாபம் ஈட்டும் தொழிலாக மாறிவிட்டது தர்மபுரியில் சீமான் பேச்சு
x
தினத்தந்தி 13 March 2021 1:16 AM IST (Updated: 13 March 2021 1:19 AM IST)
t-max-icont-min-icon

அரசியல் அதிக லாபம் ஈட்டும் தொழிலாக மாறிவிட்டது என்று தர்மபுரியில் நடந்த பிரசார கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

தர்மபுரி,

தமிழக சட்டசபை பொதுத்தேர்தலில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாலக்கோடு, தர்மபுரி, பென்னாகரம் பகுதிகளில் நேற்று வேன் மூலம் பிரசாரம் மேற்கொண்டார். இந்த கூட்டங்களில் அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் தி.மு.க. அ.தி.மு.க. ஆகிய 2 திராவிட கட்சிகளும் ஊழல் கட்சிகள். இவை காடுகள், மலைகளை அழித்து நீர்நிலைகளை ஆக்கிரமித்து முறைகேடுகளில் ஈடுபடுகின்றன. ஊழல், லஞ்சம் ஆகியவை தேசிய மயமாகி விட்டன. ஓட்டுக்கு காசு கொடுப்பது மரபாக மாறிவிட்டது. ரூ.30 கோடி, ரூ.40 கோடி என செலவு செய்து தேர்தலில் போட்டியிடுபவர்கள் வெற்றி பெற்றபின் ரூ.300 கோடி, 400 கோடி சம்பாதிக்கலாம் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறார்கள். அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்வதற்கான புனிதமான வாய்ப்பு என்ற நிலையில் இருந்து அதிக லாபம் ஈட்டும் தொழிலாக மாறிவிட்டது. இதனால் சேவை மனப்பான்மை உள்ளவர்கள் அரசியலுக்கு வர தயங்கும் நிலை ஏற்பட்டு விட்டது. 

மக்களுடன் கூட்டணி

இந்த நிலையில் படித்த இளைஞர்கள், மாணவர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், மீனவர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் வீதிக்கு வந்து போராடி கொண்டிருக்கிறார்கள். எல்லாமே பிரச்சினையாக இருக்கிறது. ஆனால் சிறந்த ஆட்சி நடப்பதாக ஆட்சியாளர்கள் கூறி கொள்கிறார்கள். தனியாரிடம் தான் தரமான கல்வி, தரமான மருத்துவம் கிடைக்கும் என்ற மனப்பான்மை உருவாக்கப்பட்டு விட்டது. இளைய தலைமுறை தனது பாதுகாப்பான எதிர்காலத்தை நினைத்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 
தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி. நாம் மக்களுடன் கூட்டணி வைத்திருக்கிறோம். தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் 13 கோடி தமிழ் மக்களின் பெரும் கனவான தமிழ் தேசிய அரசியலை உருவாக்க களத்தில் நிற்கிறோம். தமிழகத்தில் மாற்றத்தை எங்களால் தான் உருவாக்க முடியும். கேடுகெட்ட பண நாயகம் வீழ்ந்து ஜனநாயகம் வெற்றி பெற நாம் தமிழர் கட்சிக்கு தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும். 

ஊழலற்ற ஆட்சி

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிப்படையான நிர்வாகம் மூலம் ஊழலற்ற ஆட்சி செய்வோம். அரசின் மூலம் தரமான கல்வி, மருத்துவ வசதியை உருவாக்குவோம். தரமான குடிநீரை வழங்குவோம். அனைவருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கி நியாயமான ஊதியத்தை வழங்கி அனைவரும் தன்மானத்துடன் வாழ்வதை உறுதி செய்வோம். சேவை மனப்பான்மையுடன் கூடிய தூய்மையான ஆட்சியை வழங்குவோம்.
இவ்வாறு சீமான் பேசினார்.

இந்த கூட்டங்களில் மண்டல செயலாளர் கரு.பிரபாகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் செந்தில்குமார் (தர்மபுரி), ரமேஷ் (பாப்பிரெட்டிப்பட்டி), கீர்த்தனா (அரூர்), கலைச்செல்வி (பாலக்கோடு), தமிழழகன் (பென்னாகரம்) மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story