பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் திருட்டு


பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் திருட்டு
x
தினத்தந்தி 13 March 2021 1:17 AM IST (Updated: 13 March 2021 1:17 AM IST)
t-max-icont-min-icon

திருவெறும்பூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகளை கொள்ைளயடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவெறும்பூர்,மார்ச்.13-
திருவெறும்பூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகளை கொள்ைளயடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
15 பவுன் திருட்டு
திருவெறும்பூரை அடுத்த வேங்கூர் பூசைதுறை பகுதியை சேர்ந்தவர் காளிதாசன். இவர் அரியமங்கலத்தில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலையில்  வீட்டை பூட்டிவிட்டு அரியமங்கலத்தில் உள்ள வெல்டிங் பட்டறை தொழிற்சாலைக்கு வந்து விட்டார். மதியம் சாப்பிடுவதற்கு வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது,  பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 15 பவுன் நகைகள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பட்டப்பகலில் திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
265 மதுபாட்டில்கள் பறிமுதல்
 *திருச்சி மாநகரில் நேற்று முன்தினம் ஒரேநாளில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 265 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பணம் பறித்த 2 பேர் கைது
*திருச்சி நாகமங்கலம் காந்திநகரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 32). இவர், நேற்று முன்தினம் காலை திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் டவுன் பஸ்சுக்காக அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த அரியமங்கலம் காமராஜ் நகரை சேர்ந்த அப்துல்காதர் (23), சர்பூதீன் (24) ஆகியோர், பெருமாளை மிரட்டி ரூ.500-ஐ பறித்து சென்றனர்.
இதுகுறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
வைக்கோல்போரில் தீ
*துவரங்குறிச்சியை அடுத்த காரைபட்டி அருகே உள்ள அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பரமசிவம் (30) என்பவருக்கு சொந்தமான வைக்கோல் போரில் தீப்பற்றி எரிந்தது. துவரங்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
*நெ.1டோல்கேட் அருகே உள்ள கூத்தூர் குடித்தெருவை சேர்ந்தவர் முஸ்தபா. இவரது வீட்டில் மராமத்து பணி நடைபெற்றது. இந்தநிலையில் முஸ்தபாவின் மகன் சபியுல்லா (23) வீட்டில் மின்சார பெட்டியை பழுதுபார்த்தார். அப்போது, அவரை மின்சாரம் தாக்கியது. இதில் மயங்கி விழுந்த அவரை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சபியுல்லா ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர். இது  குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 ேபர் கைது
* திருச்சி அரியமங்கலம் நேருஜி நகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வம் (50). இவர் சம்பவத்தன்று அதிகாலை 2.30 மணி அளவில் சரக்கு ஆட்டோவில் காந்தி மார்க்கெட்டில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு திருச்சி-தஞ்சை மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். மகாலட்சுமிநகர் அருகே சென்றபோது, ஆட்டோவுக்கு பின்னால் ஓடிவந்த 2 பேர் ஆட்டோவில் இருந்த காய்கறிகளை எடுத்தனர். இதை கண்ட பன்னீர்செல்வம் அவர்களை தட்டிக் கேட்டார். உடனே அவர்கள் அவரை கத்தியால் கையில் கிழித்தனர். அப்போது அந்த வழியாக சென்ற ரோந்து போலீசார் அவர்களை பிடித்து காந்திமார்க்கெட் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், திருச்சி ஜீவாநகரை சேர்ந்த அமீர் (23), அரியமங்கலத்தை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பெண் மாயம்
*திருச்சி காந்தி மார்க்கெட் கோபாலகிருஷ்ணன் பிள்ளை தெருவை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் பூஞ்சோதி (19). இந்த நிலையில் இவர் மாயமானார். இது குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்து, மாயமான பூஞ்சோதியை தேடி வருகின்றனர்.
சரக்கு வேன் பறிமுதல்
*திருச்சி கம்பரசம்பேட்டை உள்ள கூடலூர் பகுதியில் உள்ள காலி மனைகளில் அனுமதியின்றி  சிலர் சரக்கு வேனில் மணல் அள்ளி கொண்டிருந்தனர். ஜீயபுரம் போலீசார் சரக்கு வேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story