வேட்டைக்காரசாமி கோவிலில் முள்படுக்கை திருவிழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


வேட்டைக்காரசாமி கோவிலில் முள்படுக்கை திருவிழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 13 March 2021 1:19 AM IST (Updated: 13 March 2021 1:21 AM IST)
t-max-icont-min-icon

பூச்சியூர் வேட்டைக்காரசாமி கோவிலில் முள்படுக்கை திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இடிகரை,

நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ளது பூச்சியூர். இங்கு பல ஆண்டுகள் பழமையான வீரபத்திர சாமி, மகாலட்சுமி, வேட்டைக்காரசாமி கோவில் ஆகிய கோவில் கள் உள்ளன. 
இந்த கோவில்களில் ஆண்டுதோறும் சிவராத்திரியன்று சிறப்பு பூஜைகள் மற்றும் முள்படுக்கை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த திருவிழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். 

தலையில் தேங்காய் உடைப்பு 

அதன்படி சிவராத்திரியையொட்டி இந்த கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையடுத்து அங்குள்ள மகாலட்சுமி கோவிலில் பக்தர்கள் தங்கள் தலையில் தேங்காய் உடைத்து தேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. 

இதில் அந்தப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செய்தனர். 

வேட்டைக்காரசாமி ஊர்வலம்
 
அதைத்தொடர்ந்து வேட்டைக்காரசாமி கோவிலில் ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தின்போது, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் வேட்டைக்காரசாமி எழுந்தருளினார்.

பின்னர் கோவிலில் இருந்து அரை கி.மீ. தூரத்தில் உள்ள ஒரு பகுதியில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. அப்போது கோவில் பூசாரி தனது காலில் ஆணி செருப்பை அணிந்தபடி ஊர்வலத்தில் நடந்து சென்றார். அவரை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வரவேற்றனர். 

அன்னதானம் 

தொடர்ந்து இரவில் மலைவாழ் பகுதியை சேர்ந்தவர்கள் தங்கள் இசைக்கருவிகளை வாசித்து சாமியை அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு இசைக்கருவிகளை வாசித்தனர். 
 இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

Next Story