முதல்நாளில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை
முதல்நாளில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை
புதுக்கோட்டை
வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்கள்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நேற்று முதல் தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்கு (தனி) தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகமாக கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகமும், விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகமாக இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகமும் செயல்படுகிறது.
இதேபோல புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகமாக புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகமும், திருமயம் சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகமாக திருமயம் தாசில்தார் அலுவலகமும், ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகமாக ஆலங்குடி தாசில்தார் அலுவலகமும், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகமாக அறந்தாங்கி சப்-கலெக்டர் அலுவலகமும் செயல்படுகிறது. மேற்கண்ட அலுவலகங்களில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
பலத்த பாதுகாப்பு
தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதனையொட்டி அந்தந்த அலுவலகங்கள் முன்பு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டிருந்தன. புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பொது அலுவலக வளாகத்தில் மாடியில் அமைந்துள்ளது. வேட்பு மனுதாக்கலையொட்டி பாதுகாப்பு பணியில் போலீசாருடன், துணை ராணுவ படையினர் துப்பாக்கிகளை கையில் ஏந்தியபடி நின்றனர். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான படிவங்களை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மற்றும் சுயேச்சைகள் சிலர் வாங்கிச் சென்றனர்.
யாரும் தாக்கல் செய்யவில்லை
வேட்புமனு தாக்கலின் முதல்நாளான நேற்று மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் வேட்பு மனு தாக்கல் கிடையாது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் வருகிற 19-ந் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். அரசியல் கட்சியினர் உள்பட வேட்பாளர்கள் நாளை மறுநாள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வருகிற 20-ந் தேதி நடக்கிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெற 22-ந் தேதி கடைசிநாளாகும். அன்றை தினம் மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story