குன்னம் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் மனு தாக்கல்
முதல் நாளில் குன்னம் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். பெரம்பலூர் தொகுதியில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
பெரம்பலூர்,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பெரம்பலூர் சப்-கலெக்டர் அலுவலகத்திலும், பெரம்பலூர் தாசில்தார் அலுவலகத்திலும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் குன்னம் தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக பெரம்பலூர் சப்-கலெக்டர் அலுவலகம், பெரம்பலூர், குன்னம் தாசில்தார் அலுவலகங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் வேட்புமனு தாக்கல் செய்யும் அறை, கலெக்டர் அலுவலகத்தில் ஊடக கண்காணிப்புக்குழு அறை, தேர்தல் பிரிவு அலுவலகம் என தனித்தனியாக தேர்தலுக்காக அறைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு வருபவர்கள் 100 மீட்டருக்கு முன்னதாகவே தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்றவகையில் எல்லைக்கோடுகள் வரையப்பட்டு, இரும்பு தடுப்புகளை அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை அந்தந்த அலுவலகங்களில் தேர்தல் அறிவிப்பு என்ற சுவரொட்டி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் ஒட்டப்பட்டது.
சுயேச்சை வேட்பாளர்
முதல் நாளான நேற்று பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வரவில்லை ஆனால் குன்னம் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதற்காக பெரம்பலூர்-துறையூர் ரோடு கல்யாண் நகரை சேர்ந்தவரும், ஓய்வு பெற்ற அரசு கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனருமான டாக்டர் எஸ்.புகழேந்தி (வயது 58) குன்னம் தாசில்தார் அலுவலகத்தில், குன்னம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக அந்த வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே, வேட்பு மனு தாக்கல் செய்யும் இடத்திற்கு போலீசார் அனுமதிக்கப்பட்டனர். வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்களில் மாற்றுத்திறனாளிகள் சென்று வருவதற்கு சக்கர நாற்காலி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்களில் போலீசார் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு பணியினை பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் போட்டியிட 6 பேரும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட 9 பேரும் நேற்று வேட்பு மனுக்களை வாங்கி சென்றுள்ளனர். இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாட்கள் ஆகும். அன்றைய தினங்களில் வேட்பு மனுக்கள் வாங்கப்படாது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story