குறைந்த அழுத்த மின்சாரத்தை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்


குறைந்த அழுத்த மின்சாரத்தை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 13 March 2021 2:07 AM IST (Updated: 13 March 2021 2:07 AM IST)
t-max-icont-min-icon

வி.கைகாட்டி அருகே குறைந்த அழுத்த மின்சாரத்தை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வி.கைகாட்டி:

குடிநீர் கிடைக்காமல் அவதி
அரியலூர் மாவட்டம், நாகமங்கலம் ஊராட்சி மாதா கோவில் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வீடுகளில் கடந்த 2 மாதமாக குறைந்த அழுத்த மின்சாரத்தால் மின்மோட்டார், டி.வி., குளிர்சாதன பெட்டி, மின்விசிறி, மிக்சி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சரியாக செயல்படவில்லை. இதனால் மின் சாதன பொருட்கள் பழுதடைவதோடு, குடிநீர் கிடைக்காமலும் அவதிப்பட்டு வந்தனர்.
இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும், அதனை சரிசெய்ய உரிய நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மாதா கோவில் கிராம மக்கள் விக்கிரமங்கலம்- அரியலூர் சாலையில் நேற்று காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மின்சார வாரிய அதிகாரிகளிடம் கூறி சீரான மின்சாரம் கிடைக்க செய்வதோடு, குடிநீர் பிரச்சினையை விரைவில் சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அரியலூர்- விக்கிரமங்கலம் சாலையில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story