6 சட்டசபை- நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கியது


6 சட்டசபை- நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கியது
x

குமரி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளில் நாகர்கோவில் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளில் நாகர்கோவில் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
7 இடங்களில் வேட்புமனு தாக்கல்
தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஆகியவை வருகிற 6-ந் தேதி நடைபெற இருக்கிறது. குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று தொடங்கியது.
கன்னியாகுமரி சட்டசபை தொகுதிக்கு பூதப்பாண்டியில் உள்ள தோவாளை தாலுகா அலுவலகத்திலும், நாகர்கோவில் தொகுதிக்கு நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கோட்டாட்சியர் அலுவலகத்திலும், குளச்சல் தொகுதிக்கு தக்கலையில் உள்ள கல்குளம் தாலுகா அலுவலகத்திலும், பத்மநாபபுரம் தொகுதிக்கு தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் உதவி கலெக்டர் அலுவலகத்திலும், விளவங்கோடு தொகுதிக்கு குழித்துறையில் உள்ள விளவங்கோடு தாலுகா அலுவலகத்திலும், கிள்ளியூர் தொகுதிக்கு கிள்ளியூர் தாலுகா அலுவலகத்திலும் வேட்பு மனுத்தாக்கல் நடைபெறுகிறது. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் பெறப்படுகிறது.
சுயேச்சை வேட்பாளர்
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அரவிந்த் தலைமையில் அந்தந்த சட்டசபை தொகுதி தேர்தல் அதிகாரிகளும் செய்துள்ளார்கள். கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2 இடங்களில் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியுள்ளதால் கலெக்டர் அலுவலகத்துக்குள் வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் ஊழியர்களின் அடையாள அட்டைகளை சோதனை செய்தபிறகே உள்ளே அனுமதித்தனர். பிறநபர்களை கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கவில்லை. வேட்பு மனு தாக்கல் நடைபெறும் பகுதிகள் முழுவதும் வீடியோ மூலம் கண்காணிக்கப்பட்டது. இதேபோல் மற்ற 5 தொகுதிகளுக்கான வேட்பு மனுக்கள் பெறப்படும் பகுதிகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதோடு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
நேற்று மதியம் வரை நாகர்கோவில் சட்டசபை தொகுதிக்கும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வரவில்லை. சிலர் வேட்பு மனுக்களை வாங்கிச் சென்றனர். பிற்பகலில் நாகர்கோவில் சட்டசபை தொகுதிக்கு லாரன்ஸ் என்பவர் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்ய கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர் கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் மயிலிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
கடைசி நாள்
வேறு எந்த தொகுதிக்கும் நேற்று வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய 19-ந் தேதி கடைசி நாள் ஆகும். அரசு வேலை நாட்களில் தினமும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். 20-ந் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற 22-ந் தேதி கடைசி நாள் ஆகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். 6-ந் தேதி வாக்குப்பதிவும், மே மாதம் 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.

Next Story