அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சிகளில் ஊழல், லஞ்சம் தான் அதிகரித்துள்ளது நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு


அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சிகளில் ஊழல், லஞ்சம் தான் அதிகரித்துள்ளது நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு
x
தினத்தந்தி 13 March 2021 8:31 AM IST (Updated: 13 March 2021 8:36 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சிகளில் ஊழல், லஞ்சம் தான் அதிகரித்து உள்ளதாக சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் நேற்று இரவு சேலம் தாதகாப்பட்டியில் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது-

உலகிலேயே அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் நாடாக இந்தியா திகழ்கிறது. அதிலும் அதிகம் நீரை உறிஞ்சும் மாநிலமாக தமிழகம் தான் உள்ளது. இதே நிலை நீடித்தால் தமிழகம் நீரற்ற நகரமாக மாறிவிடும். அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலை பற்றி தான் சிந்திப்பார்கள். ஆனால் தலைவர்கள் தான் அடுத்த தலைமுறைகளை பற்றி சிந்திப்பார்கள்.

கல்வி, மருத்துவம் போன்ற தேவைகள் அனைத்தும் தனியார் மயமாகி விட்டதோடு அரசின் கொள்கையும் சந்தை கொள்கையாக இருக்கிறது. நாளுக்கு நாள் கிராமங்கள் காலியாகி கொண்டே வருகிறது. நகரங்கள் பெருகி கொண்டே செல்கிறது. நீர்வழிப்பாதையை சீரமைத்து நிலத்தடி நீரை சேமிப்பதோடு அரசே கூட்டுப்பண்ணையை தொடங்கி விவசாயிகள் அனைவரையும் அரசு ஊழியராக்கினால் விவசாயம் செழிக்கும்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு பள்ளிகளில் கல்வி அனைத்தையும் இலவசமாக ஆக்கி உலக தரத்துக்கு உயர்த்திவிடுவோம். இதேபோல் மக்களுக்கு 1 ரூபாய் முதல் ரூ.1 கோடி வரை மருத்துவம் இலவசமாக வழங்கப்படும். மேலும் வரதட்சணையை ஒழிக்க பாடுபடுவோம். இலவசமாக கல்வி, மருத்துவம் மற்றும் வரதட்சணை ஒழிப்பு ஆகியவற்றின் மூலம் பொதுமக்களுக்கு பணத்தின் தேவை குறைந்து விடும்.

விவசாயிகளை தவிர மற்றவர்கள் ஒரு பொருட்களை விற்றால் அதன் விலையை அவர்களே நிர்ணயம் செய்கின்றனர். ஆனால் காய்கறிகளை உற்பத்தி செய்கின்ற விவசாயி அதன் விலையை தீர்மானித்து நிர்ணயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை எங்களுடைய ஆட்சியில் மாற்றப்படும்.
பெண்களுக்கு சம உரிமை கொடுக்கும் விதமாக இந்த சட்டசபை பொதுத்தேர்தலில் 117 இடங்களில் பெண் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளோம். கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் மாறி, மாறி தமிழகத்தில் சாதி ரீதியாக மக்களை பிரித்து ஆளுகிறது. அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுக்கு டாஸ்மாக் தான் கொள்கை. இந்த 2 கட்சிகளிலும் லஞ்சம், ஊழல், திருட்டு தான் அதிகரித்துள்ளது.

இந்த தேர்தல் ஒரு மாறுதலாக பார்க்க வேண்டும். நிறைய மாற்றங்களை எங்களால் கொண்டு வர முடியும். மக்களை நம்பி தான் இந்த தேர்தலில் தனித்து நிற்கிறோம். மேலும் மக்கள் கைவிடமாட்டார்கள் என நம்பிக்கையில் உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார். 

இதையடுத்து அவர், 11 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார். இதையடுத்து சீமான், பிறந்து 5 மாதமே ஆன ஒரு பெண் குழந்தைக்கு அமீனா என்று பெயர் சூட்டினார். முன்னதாக அவர் ஓமலூர், மேச்சேரி பகுதிகளில் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

Next Story