குன்றத்தூர் அருகே சாலையோரம் நின்ற கன்டெய்னர் லாரி மீது கார் மோதல்; 2 என்ஜினீயர்கள் பலி ஒருவர் படுகாயம்


குன்றத்தூர் அருகே சாலையோரம் நின்ற கன்டெய்னர் லாரி மீது கார் மோதல்; 2 என்ஜினீயர்கள் பலி ஒருவர் படுகாயம்
x
தினத்தந்தி 13 March 2021 11:13 AM IST (Updated: 13 March 2021 11:13 AM IST)
t-max-icont-min-icon

குன்றத்தூர் அருகே வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையோரம் நிறுத்தி இருந்த கன்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 2 என்ஜினீயர்கள் பலியானார்கள். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

பூந்தமல்லி, 

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் கார்த்திக் (வயது 37), விஜய்பரணிகுமார் (39), பரத்வாஜ் (27). சாப்ட்வேர் என்ஜினீயர்களான இவர்கள் 3 பேரும் நேற்று தெலுங்கானாவில் இருந்து புதுச்சேரிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

காரை பரத்வாஜ் ஓட்டினார். பின் இருக்கையில் கார்த்திக், விஜய்பரணிகுமார் இருவரும் அமர்ந்து இருந்தனர். வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் குன்றத்தூர் அருகே வேகமாக வந்த கார், அங்கு சாலையோரம் நிறுத்தி இருந்த கன்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது.

கன்டெய்னர் லாரியில் மோதிய அதே வேகத்தில் கார், இடதுபுறமாக திரும்பி சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்திலும் மோதியது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. காரின் பின் இருக்கையில் அமர்ந்து இருந்த கார்த்திக் மற்றும் விஜய்பரணிகுமார் இருவரும் இடிபாடுகளில் சிக்கி காரில் அமர்ந்த நிலையிலேயே உடல் நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். காரை ஓட்டிவந்த பரத்வாஜ், படுகாயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தகவலஅறிந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்துக்குள்ளான காரின் கதவுகளை கடப்பாரையால் உடைத்து,

அதில் சிக்கி இருந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்தில் சிக்கிய காரை கிரேன் உதவியுடன் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.

இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story