மனைவியை அடித்துக்கொன்ற தொழிலாளி கைது
நடத்தையில் சந்தேகப்பட்டதால் மனைவியை அடித்துக்கொன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பந்தலூர்,
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட எருமாடு அருகே உள்ளது, கொல்லம்வயல் ஆதிவாசி காலனி. இங்கு வசித்து வந்தவர் தம்பி(வயது 47). தொழிலாளி. இவருடைய மனைவி ராதா(40). இவர் நேற்று முன்தினம் உடலில் பலத்த காயங்களுடன் வீட்டுக்குள் இறந்து கிடந்தார்.
அப்போது அங்கு தம்பி இல்லை. இதுகுறித்த தகவலின்பேரில் விரைந்து வந்த எருமாடு போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மர்மச்சாவு என்று வழக்குப்பதிவு செய்து, ராதாவின் கணவரான தம்பியை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
உடனே அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று, கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் ராதாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக அவர் போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு:-
எனது நடத்தையில் ராதா சந்தேகப்பட்டு வந்தார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு வந்தது. கடந்த 11-ந் தேதி இரவில் எருமாடு சிவன் கோவிலில் விழா நடந்தது. அந்த விழாவுக்கு நான் மட்டும் தனியாக சென்றேன். எனது மனைவியை அழைத்து செல்லவில்லை.
பின்னர் இரவில் வீடு திரும்பினேன். அப்போது என்னை அழைத்து செல்லாமல் யாரை அழைத்துக்கொண்டு விழாவிற்கு சென்றாய்? என்று ராதா கேட்டார். இதனால் எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த நான், வீட்டில் இருந்த உருட்டு கட்டையை எடுத்து ராதாவை பலமாக அடித்தேன். இதில் அவர் மயங்கி விழுந்துவிட்டார். அவர் மயங்கியதுபோல நடித்து தூங்குகிறார் என்று நான் நினைத்தேன். பின்னர் நானும் படுத்து தூங்கிவிட்டேன்.
நேற்று காலையில்(அதாவது நேற்று முன்தினம்) ராதா தூங்கிகொண்டு இருப்பதாக நினைத்து நான் வழக்கம்போல் எழுந்து வெளியே சென்றுவிட்டேன்.
பின்னர் ராதா இறந்துவிட்டார் என்பது உறவினர்கள் கூறும்போதுதான் எனக்கு தெரியும். இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறி உள்ளார். இதையடுத்து மர்மச்சாவு வழக்கை கொலை வழக்காக மாற்றி தம்பியை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story