மின்னணு வாக்காளர் அட்டையை பதிவிறக்க சிறப்பு முகாம் தொடங்கியது
நீலகிரியில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்காளர் அட்டையை பதிவிறக்க சிறப்பு முகாம் தொடங்கியது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 308 வாக்குச்சாவடிகள், கூடலூர் சட்டமன்ற தொகுதியில் 280 வாக்குச்சாவடிகள், குன்னூர் சட்டமன்ற தொகுதியில் 280 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 868 வாக்குச்சாவடிகள் உள்ளன.
கடந்த ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின்போது 18 வயது நிரம்பியவர்கள் பெயர் சேர்ப்பது, திருத்தம் செய்வது, முகவரி மாற்றுவது போன்றவற்றுக்காக விண்ணப்பித்தனர்.
இதற்கிடையே படிவம்-6-ல் தங்களது தனிப்பட்ட செல்போன் எண்ணை குறிப்பிட்ட புதிய வாக்காளர்கள் அனைவரும் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ள இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதற்காக நீலகிரியில் உள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது. ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 120 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிதாக விண்ணப்பித்தவர்கள் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்ய செல்போன் கொண்டு வந்தனர்.
வாக்குச்சாவடிகளில் கணினி மற்றும் பிரிண்டர் மூலம் மின்னணு வாக்காளர் அடையாள அட்டை எடுத்து கொடுக்கப்பட்டது. பிரிண்டர் வசதி இல்லாத வாக்குச்சாவடிகளில் கணினி மூலம் இளம் வாக்காளரின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு மின்னணு வாக்காளர் அடையாள அட்டை அனுப்பி வைக்கப்பட்டது. சிறப்பு முகாம் மூலம் செல்போன் மற்றும் கணினியில் பதிவு செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.
புதிய மின்னணு வாக்காளர் அடையாள அட்டையில் கியூஆர் கோடு உள்ளது. தேர்தல் நடைபெறும் நாளில் வாக்குச்சாவடியில் அந்த கியூஆர் கோடை ஸ்கேன் செய்தால் வாக்காளரின் விவரங்கள் தெரியும். பின்னர் ஓட்டுப்போட அனுமதிக்கப்படுவர்.
மேலும் அதில் சம்பந்தப்பட்ட வாக்காளர் எந்த தொகுதி, எந்த வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்த வேண்டும் என்ற விவரங்கள் இடம் பெற்று இருக்கும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் உள்ள புனித திரேசன்ளை உயர்நிலைப்பள்ளியில் நடந்த சிறப்பு முகாமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம் நடக்கிறது.
Related Tags :
Next Story