கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் உற்சாகம்


கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் உற்சாகம்
x
தினத்தந்தி 13 March 2021 9:29 PM IST (Updated: 13 March 2021 9:29 PM IST)
t-max-icont-min-icon

வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர்.

கொடைக்கானல்:
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். 
தற்போது கோடைகாலம் தொடங்க உள்ளதால், கொடைக்கானலில் நிலவும் சீதோஷண சூழலை அனுபவிக்க பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இங்கு குவிந்த வண்ணம் உள்ளனர். 
இதற்கிடையே நேற்று வார விடுமுறை என்பதால் கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. நேற்று காலை முதலே சுற்றுலா பயணிகள் சாரை, சாரையாக வாகனங்களில் நகருக்கு வருகை தந்தனர். குறிப்பாக கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். 
இதனால் நகரில் வாகன நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். 
முன்னதாக கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு, வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் சுகாதாரத்துறையினர் சார்பில் கொரோனா பரிசோதனை செய்தனர். அதன்பிறகே நகருக்குள் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். 
நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், பைன் மரக்காடு, பில்லர் ராக் உள்ளிட்ட சுற்றுலா இடங்களை பார்வையிட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். மேலும் அவர்கள் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர். 
கொடைக்கானலில் நேற்று பகலில் மிதமான வெப்பம் இருந்த நிலையில், பிற்பகல் முதல் மேகங்கள் சூழ்ந்து குளுமையான சூழல் ஏற்பட்டது. இதனை சுற்றுலா பயணிகள் அனுபவித்து மகிழ்ச்சி அடைந்தனர். 
சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தந்ததால் நகரில் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story