உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.3½ லட்சம் பறிமுதல்


உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.3½ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 13 March 2021 9:53 PM IST (Updated: 13 March 2021 9:53 PM IST)
t-max-icont-min-icon

உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3½ லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

உசிலம்பட்டி,மார்ச்.
உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3½ லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருநகர் அண்ணா பூங்கா வளாகத்தில் நேற்று காலை தாசில்தார் பார்த்திபன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், ஏட்டுகள் செந்தில்குமார், சுகப்பிரியா ஆகியோர் அடங்கிய பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ரூ.2½ லட்சம் பறிமுதல்
அப்போது திருநகர் பகுதியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது அவர் உரிய ஆவணம் இன்றி ஒரு பையில் ரூ.2 லட்சத்து 56 ஆயிரம் கொண்டு சென்றது தெரிய வந்தது. 
தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேஸ்வரி பணம் கொண்டு வந்தவரிடம் விசாரணை செய்தார். உரிய ஆவணத்தை ஒப்படைத்து பணத்தை திரும்ப பெற்றுச் செல்லலாம் என்று அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து தாசில்தார்கள் மூர்த்தி, பார்த்திபன் ஆகியோர் பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர். 
ரூ.1 லட்சம்
உசிலம்பட்டி அருகே ஆண்டிப்பட்டி கணவாய் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினரும், போலீசாரும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்ததில் தேனி மாவட்டம் ஆனைமலையான்பட்டியைச் சேர்ந்த பொற்கொடி என்பவர் ரூ.1 லட்சத்தை எடுத்து சென்றது தெரிய வந்தது. 
இது குறித்து விசாரணை நடத்தியதில், நகை வாங்குவதற்காக பணத்தை கொண்டு சென்றதாக தெரிவித்தார்.
ஆனாலும் அந்த பணத்துக்கு உரிய ஆவணம் ஏதும் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். 
வட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் உதவி அலுவலருமான விஜயலட்சுமி உதவியுடன் அந்தப் பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story