செயற்கை குட்டைகள் அமைத்து மீன் வளர்க்க விவசாயிகள் ஆர்வம்


செயற்கை குட்டைகள் அமைத்து மீன் வளர்க்க விவசாயிகள் ஆர்வம்
x
தினத்தந்தி 13 March 2021 10:00 PM IST (Updated: 13 March 2021 10:01 PM IST)
t-max-icont-min-icon

மசினகுடி பகுதியில் செயற்கை குட்டைகள் அமைத்து மீன் வளர்க்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கூடலூர்,

நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு அடுத்தபடியாக அதிகளவில் மலைக்காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. இ்ங்கு விளைவிக்கப்படும் மலைக்காய்கறிகள் சமவெளி பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 

இந்த நிலையில் நீலகிரி மக்களின் உணவு தேவைக்கு மீன்கள் சரிவர கிடைப்பது இல்லை. கேரளாவில் இருந்து மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இருப்பினும் தேவைக்கேற்ப கிடைப்பது இல்லை.

இதை கருத்தில் கொண்டு மசினகுடி பகுதியில் செயற்கை குட்டைகள்(பயோ பிளாக்) அமைத்து மீன் வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு குறைந்த அளவு முதலீடு மற்றும் குறைந்த பரப்பளவிலான நிலம் இருந்தால் போதும். 

மசினகுடி பகுதியில் பெரும்பான்மையாக விவசாயிகள் வசித்து வருகின்றனர். அவர்கள் கால்நடைகள் வளர்ப்பு தொழிலுடன், மீன் வளர்ப்பையும் தொடங்கி உள்ளனர்.

இது குறித்து மீன் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் விவசாயிகள் கூறியதாவது:-
பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் மீன் வளர்ப்புக்கு வங்கி கடன் மற்றும் மானியம் வழங்கப்படுகிறது. திலோப்பியா ரக மீன் குஞ்சுகள் செயற்கை குட்டைகள் அமைத்து வளர்க்கப்படுகிறது. 

1 குட்டை அமைக்க ரூ.50 ஆயிரம் மட்டுமே செலவாகிறது. இதில் 2 ஆயிரம் மீன் குஞ்சுகளை வளர்க்கலாம். இதற்காக சுழற்சிமுறையில் சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார் கொண்டு தண்ணீரில் ஆக்சிஜன் செலுத்த வேண்டும்.

முன்னதாக குட்டைகளில் மாட்டு சாணம், சுண்ணாம்பு கலவையை இட வேண்டும். அதன் மூலம் தண்ணீரில் இருக்கும் அமில-காரத்தன்மை சமநிலைக்கு வந்துவிடும்.

அதன் பின்னர் மீன் குஞ்சுகளை குட்டைகளில் விடலாம். 5 குட்டைகள் அமைத்து மீன்களை வளர்க்க சுமார் ரூ.3 லட்சம் மட்டுமே ஆகும். 7 மாதங்கள் முடிவில் மீன்கள் நன்கு வளர்ந்துவிடும். சராசரியாக 1 மீன் முக்கால் கிலோ வரை வளரும். இதன் மூலம் ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.

மேலும் மீன்களையும் நீலகிரி மாவட்ட மக்களின் தேவைக்கேற்ப எளிதாக விற்பனை செய்ய முடியும். இதனால் விவசாயத்துடன் மீன்களை வளர்த்து வந்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும். இதற்காக மீன்வள துறை அலுவலகத்தை நாடினால் அனைத்து உதவிகளையும் செய்து தருகிறார்கள். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Next Story