விழுப்புரம் அருகே நடந்த தனித்தனி விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் பலி


விழுப்புரம் அருகே நடந்த தனித்தனி விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 13 March 2021 10:31 PM IST (Updated: 13 March 2021 10:31 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே நடந்த தனித்தனி விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் உயிரிழந்தனா்.

விழுப்புரம், 

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் இதயத்துல்லா மகன் ஷபியுல்லா (வயது 35). இவர் புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் தினமும் காலையில் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று காலை ஷபியுல்லா வழக்கம்போல் தனது மோட்டார் சைக்கிளில் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டார். கெங்கராம்பாளையம் சோதனைச்சாவடி அருகில் செல்லும்போது பின்னால் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கிச்சென்ற தனியார் பஸ், ஷபியுல்லாவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் அந்த பஸ், சாலையோரம் நின்றுகொண்டிருந்து திருபுவனையை சேர்ந்த ஏழுமலை என்பவர் மீது மோதியதில் அவருக்கு வலதுகாலில் எலும்புமுறிவு ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.

மற்றொரு விபத்து
இதேபோல் கண்டமங்கலத்தில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் சாலையோரமாக நடந்து சென்ற 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி மீது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story