வேட்பாளரை மாற்றக்கோரி 3 வது நாளாக அ.தி.மு.க.வினர் போராட்டம் 140 பேர் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி தொகுதி வேட்பாளரை மாற்றக்கோரி அ.தி.மு.க. வினர் 3 வது நாளாக சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மேலும் 140 பேர் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி
வேட்பாளரை மாற்றக்கோரி
கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் செந்தில்குமார் அறிவிக்கப்பட்டார். இதற்கு கள்ளக்குறிச்சி நகர அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தும், முன்னாள் எம்.எல்.ஏ. அழகுவேல் பாபுவை வேட்பாளராக அறிவிக்கக்கோரியும் கடந்த 10 மற்றும் 11-ந் தேதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இதற்கு கட்சியின் தலைமை நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி நகர அ.தி.மு.க. அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வேட்பாளர் செந்தில்குமாரை மாற்றிவிட்டு முன்னாள் எம்.எல்.ஏ.அழகுவேல்பாபுவை அறிவிக்கக்கோரி நகரத்தில் உள்ள 21 வார்டு செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்துவது, தங்களின் கட்சி பதவிகளை ராஜினாமா செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3-வது நாளாக மறியல்
இதையடுத்து அ.தி.மு.க.வினர் நேற்று 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக கள்ளக்குறிச்சி நகர அ.தி.மு.க. அலுவலகத்தில் இருந்து நகர செயலாளர் பாபு தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் பேரணியாக புறப்பட்டு நான்கு முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் மறியலை கைவிட்டு, அங்கிருந்து கட்சி அலுவலகத்துக்கு பேரணியாக புறப்பட்டனர். உடனே நகர செயலாளர் பாபு உள்ளிட்ட நிர்வாகிகளை போலீசார் கைது செய்ய முயன்றனர். ஆனால் கட்சி நிர்வாகிகள் தங்களை கைது செய்யக்கூடாது எனவும், நாங்கள் பேரணியாக கட்சி அலுவலகத்திற்கு செல்கிறோம் என கூறினார்கள்.
போலீசாருடன் தள்ளுமுள்ளு
ஆனால் இதை ஏற்க மறுத்த போலீசார், அவர்களை போலீஸ் வாகனத்தில் ஏறும்படி கட்டாயப்படுத்தினார்கள். இதனால் அ.தி.மு.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது நகர செயலாளர் பாபு, திடீரென மயங்கினார். பின்னர் உடனடியாக அவர், சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் பேரணியில் பங்கேற்ற அனைவரும் கலைந்து சென்றனர்.
140 பேர் ராஜினாமா
இதற்கிடையில் கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை மாற்றக்கோரி ஜெயலலிதா பேரவை செயலாளர் முருகன், பேரவை இணை செயலாளர் கோபி, இளைஞரணி செயலாளர் குட்டி, அ.தி.மு.க. நகர அவைத்தலைவர் சர்புதீன், நகர பொருளாளர் சுரேஷ்குமார், நகர துணைச் செயலாளர் புண்ணியமூர்த்தி மற்றும் 27 வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி செயலாளர்கள், நிர்வாகிகள் என 140 பேர் தங்களின் ராஜினாமா கடிதத்தை நகர செயலாளர் பாபுவிடம் வழங்கினார்கள். இதனால் கள்ளக்குறிச்சியில் பரபரப்பான சூழல் நிலவி உள்ளது.
Related Tags :
Next Story