கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு முதல்கட்டமாக 1,885 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு  முதல்கட்டமாக 1,885 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 13 March 2021 11:23 PM IST (Updated: 13 March 2021 11:23 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு முதல் கட்டமாக 1,885 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி கலெக்டர் கிரண்குராலா தலைமையில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

ஆலோசனை கூட்டம்

சட்டசபை தேர்தலையொட்டி உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு எந்திரங்கள், வாக்குப் பதிவை உறுதி செய்யும் எந்திரங்கள் முதல் கட்டமாக கணினி மூலம் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்வது குறித்து அனைத்து கட்சி பிரதநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிரண்குராலா தலைமை தாங்கினார். தி.மு.க. ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஆறுமுகம், பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாலசுந்தரம் மற்றும் அப்பாவு, ஸ்டாலின்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

1885 வாக்குப்பதிவு எந்திரங்கள்

கூட்டத்தில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள 407 வாக்குச்சாவடி மையங்களுக்கு 489 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு எந்திரங்கள், வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்கள் 550, ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் 374 வாக்குச்சாவடி மையங்களுக்கு 449 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு எந்திரங்கள், வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்கள் 505, சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் 372 வாக்குச்சாவடி மையங்களுக்கு 447 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு எந்திரங்கள், வாக்குப்பதிவை உறுதி செய்யும் இயந்திரங்கள் 503, கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 416 வாக்குச்சாவடி மையங்களுக்கு 500 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டு்ப்பாட்டு எந்திரங்கள், வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்கள் 562 என மொத்தம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 1,569 வாக்குச்சாவடி மையங்களுக்கு 1,885 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு எந்திரங்கள், வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்கள் 2,120 ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணன், சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜவேல், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜாமணி, தேர்தல் தனி தாசில்தார், பாலசுப்பிரமணியன் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அனுப்பி வைக்கப்பட்டது

இதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி அருகே தச்சூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக சேமிப்பு கிடங்கில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு்ள்ள அறை அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் திறக்கப்பட்டு கணிணி மூலம் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்கள் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.



Next Story