கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான பயிற்சி
கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.
கரூர்
தலைமை அலுவலர்களுக்குபயிற்சி
கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பணிபுரியும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கு தடாகோவில் கொங்கு ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியிலும், கரூர் சட்டமன்ற தொகுதியில் பணிபுரியும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கு வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் பணிபுரியும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கு புலியூர் அரசு நிதியுதவி பெறும் ராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளியிலும், குளித்தலை சட்டமன்ற தொகுதியில் பணிபுரியும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கு ஸ்ரீகலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மலர்விழி நேற்று பார்வையிட்டு வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணிகள் குறித்து தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.
1,274 வாக்குச்சாவடி மையங்கள்
அப்போது, வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களிடையே மாவட்ட தேர்தல் அலுவலர் கூறியதாவது:- நமது கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 1,274 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இவ்வாக்குச்சாவடிகளில் பணிபுரிவதற்காக கடந்த 10-ந்தேதி கணினி மூலம் குழுக்கள் முறையில் சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குசாவடியில் பணிபுரியும் அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தனித்தனியாக பயிற்சி
அதன்படி, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்காக 310 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கும்,கரூர் சட்டமன்ற தொகுதிக்காக 404 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்காக 444 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கும், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்காக 371 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அவ்வாறு, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது. வழக்கமாக, வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு ஒன்றாக பயிற்சி நடைபெறும். நன்கு பயிற்சி பெற வேண்டும் என்ற அடிப்படையில் இருவருக்கும் தனித்தனியாக பயிற்சி அளிக்கப்படும். அந்தவகையில், வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கு மட்டும் பயிற்சி கொடுக்கப்படுகிறது. மேலும் வாக்குப்பதிவு நாளான்று செய்யவேண்டிய பணிகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தால் தொகுத்து வழங்கப்பட்ட வழிமுறைகள் குறித்து தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் அச்சடிக்கப்பட்ட கையேடுகள் வழங்கப்பட்டுள்ளது. இதை நன்கு படித்து தெரிந்து கொள்ள வேண்டும். வாக்குப்பதிவு நேரத்திற்கு முன்னதாக மாதிரி வாக்குப்பதிவினை அரசியல் கட்சியின் ஏஜென்டுகளுக்கு முன்பாக நடத்தி முடித்த பின் வாக்குப்பதிவை தொடங்க வேண்டும்.
நேரலை முறையில்...
வாக்குச்சாவடி மையங்களுக்கு வரும் பார்வையற்ற வாக்காளர்களுக்கு உரிய படிவம் கொடுத்து பூர்த்தி செய்த பின்பு அவர்கள் கூறும் நபர்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் நிகழ்வுகளை சட்டமன்ற தொகுதியில் உள்ள 50 சதவீத வாக்குச்சாவடிகளை நேரலை முறையில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோர் பார்க்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது.
அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள கேமராக்களில் அரசியல் கட்சிகளின் ஏஜென்டுகள் அமர்ந்துள்ள இடமும், வாக்குச்சாவடி மையத்தின் பெயர் மற்றும் எண் உள்ளிட்ட நிகழ்வுகள் தெரியும் வகையிலும், வாக்குப்பதிவு எந்திரம் தெரியாத வகையிலும் அமைக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். எனவே, ஒவ்வொரு வாக்குச்சாவடியில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு அந்த வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களே பொறுப்பாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
இதில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பாலசுப்பிரமணியன் (கரூர்), ஷேக்அப்துல்ரக்மான் (குளித்தலை), தவச்செல்வம் (அரவக்குறிச்சி), தட்சிணாமூர்த்தி (கிருஷ்ணராயபுரம்), உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சக்திவேல் (கரூர்), பன்னீர்செல்வம் (அரவக்குறிச்சி), மகுடீஸ்வரன் (கிருஷ்ணராயபுரம்), கலியமூர்த்தி (குளித்தலை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story