காரையூர் அருகே ஜல்லிக்கட்டு மாடுகள் முட்டியதில் 18 பேர் காயம்


காரையூர் அருகே ஜல்லிக்கட்டு மாடுகள் முட்டியதில் 18 பேர் காயம்
x
தினத்தந்தி 14 March 2021 1:23 AM IST (Updated: 14 March 2021 1:23 AM IST)
t-max-icont-min-icon

காரையூர் அருகே ஜல்லிக்கட்டு மாடுகள் முட்டியதில் 18 பேர் காயம்

காரையூர்
புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள இடையாத்தூர் பொன்மாசிலிங்கம் அய்யனார் கோவிலில் சிவராத்திரை விழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த அப்பகுதி கிராமத்தினர் முடிவு செய்தனர்.ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் மதுரை ஐகோர்ட்டு கிளை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று  நேற்று காலை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முன்னதாக, காரையூர் வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ஜல்லிக்கட்டு காளைகளை பரிசோதனை செய்தனர். மேலும், 218 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு களத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். பின்னர், பொன்னமராவதி தாசில்தார் ஜெயபாரதி, துணை தாசில்தார் பிரகாஷ் ஆகியோர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதன் பின்னர் அலங்கரிக்கப்பட்ட உள்ளூர் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிருந்து அழைத்து வரப்பட்டிருந்த 788 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து ஆக்ரோஷமாக வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். அப்போது பல காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபட்டன. சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் மிரட்டின.ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 5 பேர், பார்வையாளர்கள் 9 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 4 பேர் என 18 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் மாடுபிடி வீரர்கள் மண்டையூரை சேர்ந்த சரவணகுமார் (வயது 21), குடுமியான்மலையை சேர்ந்த ரவி (25) ஆகியோரை மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 
தேர்தல் விதிமுறைகளின்படி பரிசு பொருட்கள் வழங்கப்படவில்லை. விதிமுறைகளின்படி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறதா என்பதை அரசு அதிகாரிகள், போலீசார் கண்காணித்தனர். ஜல்லிக்கட்டையொட்டி இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மொழி அரசு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story