பாளையத்தில் மயானக்கொள்ளை திருவிழா


பாளையத்தில் மயானக்கொள்ளை திருவிழா
x
தினத்தந்தி 14 March 2021 1:40 AM IST (Updated: 14 March 2021 1:40 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் அருகே உள்ள பாளையம் கிராமத்தில் மயானக்கொள்ளை திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பெரம்பலூர்:

மயானக்கொள்ளை
பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில் சுவேத நதிக்கரையில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மாசி மாத அமாவாசையான நேற்று மயானக்கொள்ளை (சூரை) திருவிழா நடைபெற்றது. மயானக்கொள்ளையை முன்னிட்டு நேற்று கோவிலில் இருந்து காலை 7 மணிக்கு காளி புறப்பாடு நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு வள்ளால ராஜன் கோட்டை இடித்தல், குடல் பிடுங்கி மாலையிடுதல் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து கோவிலில் இருந்து அங்காள பரமேஸ்வரி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பெரம்பலூர்- துறையூர் சாலையில் பாளையம் பாலம் அருகே தோப்பு பகுதியில் உள்ள மயானத்துக்கு ஊர்வலமாக மதியம் 1 மணிக்கு சென்றார்.
ரத்தம் கலந்த சாதத்தை...
அப்போது மயானத்தில் அமைக்கப்பட்டிருந்த சாமி உருவத்திற்கு கீழ் அரிசி சாதம் கொட்டப்பட்டிருந்தது. அந்த சாதத்தில் கிடா வெட்டி ரத்தத்தை சாதத்துடன் கலந்தனர். பின்னர் ரத்தம் கலந்த சாதத்தை அள்ளி வீசினர். அதனை அங்கு திரண்டிருந்த ஏராளமான பெண் பக்தர்கள் மடியேந்தி பெற்றுக்கொண்டனர். பின்னர் அந்த சாத்தை உண்டனர்.
இத்திருவிழாவில் பங்கேற்று, சாதத்தை வாங்கி உண்டால், குழந்தை இல்லாத தம்பதியினருக்கு குழந்தை பேறு கிடைக்கும், இளம்பெண்களுக்கு திருமணத்தடை உள்ளிட்டவை நீங்கும் என்ற ஐதீகத்தால் பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
திரளான பக்தர்கள் தரிசனம்
அப்போது அருள் வந்து சாமி ஆடியவர்களிடம் பக்தர்கள் கோழிகளை நேர்த்திக்கடனாக செலுத்தினர். சாமி ஆடியவர்கள் கோழிகளை பெற்று அதன் ரத்தத்தை உறிஞ்சி குடித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து அம்மன் ஊர்வலம் நடந்தது. மயானக் கொள்ளையை முன்னிட்டு ஆங்காங்கே பக்தர்களின் பசியை தீர்க்க அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணிக்கு வீரபத்திரர் சுவாமி ஊர்வலம் நடைபெறுகிறது. நாளை (திங்கட்கிழமை) மதியம் 4 மணிக்கு கோவிலில் மாவிளக்கு, பொங்கலிடுதல் நடக்கிறது. அதைத்தொடர்ந்து இரவு 10 மணிக்கு அம்மன் ஊர்வலம் மேள, தாளத்துடன் நடக்கிறது. அப்போது பக்தர்கள் அம்மன் வேடமணிந்து ஆடி வருவார்கள். நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவடைகிறது.
முன்னதாக மயானக்கொள்ளை திருவிழா நடந்த இடத்தில், பெண் பக்தர்கள் தண்ணீரில் தலைமுழுகி, ஈரத்துணியுடன் முழங்காலிட்டு மடியேந்தி காத்திருந்தனர். அப்போது காளி வேடமணிந்தவர்கள் பெண்களை முறத்தால் அடித்து மந்திரித்தனர். மேலும் மனித எலும்பை தலையில் வைத்து பெண்களை ஆசீர்வதித்தனர். இதேபோல் காளி ஊர்வலம் மயானத்தில் இருந்து புறப்பட்டு கோவிலுக்கு வந்தபோது, வழியெங்கும் குறுக்கே முழங்காலிட்டு மடியேந்தி காத்திருந்த பெண் பக்தர்கள் மீது காளி வேடமணிந்தவர்கள் முறத்தால் அடித்து ஆசீர்வதித்தனர்.

Next Story