முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா


முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா
x
தினத்தந்தி 14 March 2021 1:55 AM IST (Updated: 14 March 2021 1:55 AM IST)
t-max-icont-min-icon

இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா வருகிற 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா வருகிற 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தாயமங்கலம் திருவிழா

இளையான்குடி அருகே உள்ளது தாயமங்கலம். இங்கு இந்து சமய அறநிலையத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக இந்த விழா நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்தாண்டு திருவிழா வருகிற 23-ந்தேதி முதல் தொடங்கி ஏப்ரல் மாதம் 2-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி வரும் 23-ந்தேதி அன்று காலை 10.35 மணிக்கு நவசக்திஹோமத்துடன் தொடங்கி மாலை 6 மணிக்கு லட்சார்ச்சனையும், இரவு 10 மணிக்கு விக்னேஸ்வரர் பூஜை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது.
 விழாவில் தினந்தோறும் இரவு அம்மன் சிம்ம வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 30-ந்தேதி அன்று பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

 தேரோட்டம்

மறுநாள் 31-ந்தேதி இரவு 7.25 மணிக்கு மின்விளக்கு அலங்காரத்தில் தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் ஏப்ரல் மாதம் 1-ந்தேதி அன்று காலை பக்தர்கள் பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல், ஆயிரம் கண் பானை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு ஊஞ்சல் நிகழ்ச்சியும், இரவு 10.30 மணிக்கு புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மறுநாள் 2-ந்தேதி காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிவகங்கை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை வெங்கடேசன் செட்டியார் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Next Story