அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் தேர்தல் செலவின பார்வையாளர் திடீர் ஆய்வு
அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் தேர்தல் செலவின பார்வையாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் தேர்தல் செலவின பார்வையாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சட்டமன்ற தேர்தல்
தமிழ்நாட்டில் வருகிற 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதனால் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்து உள்ளன. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் வினியோகம் செய்யப்படுவதை தடுக்க தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் வாகன சோதனை நடத்தப்பட்டு உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு சென்றால் அந்த தொகை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தேர்தல் செலவின பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சட்டமன்ற தொகுதிகளுக்கும் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆய்வு
அதன்படி அந்தியூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் செலவின பார்வையாளராக அர்ஜூன் லால் ஜட் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதைத்தொடர்ந்து அவர் நேற்று அந்தியூருக்கு சென்றார். அவர் அந்தியூர் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதுமட்டுமின்றி வாக்குச்சாவடி அமைந்து உள்ள பகுதிகளில் கட்சிகளின் விளம்பரங்கள் உள்ளதா? எனவும் ஆய்வு மேற்கொண்டார்.
தபால் வாக்கு
மேலும் அவர் அந்தியூர் தாலுகா அலுவலகத்துக்கு சென்றார். பின்னர் அவர் அங்குள்ள அதிகாரிகளிடம், ‘தபால் வாக்கு அளிப்பதற்காக விருப்ப மனு அளித்த 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எத்தனை பேர் உள்ளனர்,’ என்பது குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது அந்தியூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி இளங்கோ, தாசில்தார் வீரலட்சுமி, அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அதிகாரி சக்திவேல், அந்தியூர் கிராம நிர்வாக அதிகாரி முருகானந்தம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் உடனிருந்தனர்.
இதையொட்டி அந்தியூர், தவுட்டுப்பாளையம், புதுப்பாளையம், கெட்டிசமுத்திரம், அந்தியூர் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியையும் தேர்தல் செலவின பார்வையாளர் அர்ஜூன் லால் ஜட் பார்வையிட்டார்.
Related Tags :
Next Story