கோவையில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் வார்டனை தாக்கி விட்டு 6 சிறுவர்கள் தப்பி ஓட்டம்
கோவையில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் வார்டனை தாக்கி விட்டு 6 சிறுவர்கள் இரவில் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை
கோவையில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் வார்டனை தாக்கி விட்டு 6 சிறுவர்கள் இரவில் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
6 சிறுவர்கள் தப்பி ஓட்டம்
18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஏதாவது குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்களை சட்டப்படி தண்டிக்க முடியாது. அவர்கள் கூர் நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டு அவர்கள் நல்வழிபடுத்தப்படுவார்கள்.
கோவை மற்றும் அண்டை மாவட்டங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கோவை லட்சுமி மில் சந்திப்பில் உள்ள கூர் நோக்கு இல்லத்தில் வைக்கப்படுவார்கள்.
அங்கு அவர்களை கண்காணிப்பதற்காக வார்டன் நியமிக்கப்பட்டுள்ளார். அங்கேயே சிறுவர்களுக்கு உணவு கொடுக்கப்படும். கூர்நோக்கு இல்லத்தில் உள்ள சிறுவர்களுக்கு பாடங்களும் கற்று கொடுக்கப்படும்.
கோவை கூர்நோக்கு இல்லத்தில் மொத்தம் 11 சிறுவர்கள் வைக்கப்பட்டிருந்தனர். நேற்று இரவு 7.30 மணியளவில் 2 அறைகளில் வைக்கப்பட்டிருந்த சிறுவர்கள் இரவு சாப்பாட்டுக்கு வெளியே விடப்பட்டனர்.
அப்போது அவர்களில் 6 சிறுவர்கள் அங்கிருந்த வார்டனை தாக்கி விட்டு அவரை தாங்கள் தங்கியிருந்த அறையில் தள்ளி வெளிப்பக்கமாக பூட்டினார்கள். பின்னர் மற்ற 5 சிறுவர்களை மற்றொரு அறையில் தள்ளி பூட்டினார்கள்.
போலீசார் விசாரணை
அதன்பின்னர் வெளிகேட் பூட்டுக்கான சாவியை சிறுவர்கள் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பினார்கள். அறையில் தள்ளி பூட்டப்பட்ட வார்டன் சத்தம் போட்டு பார்த்தார். ஆனால் அவர் சத்தம் வெளியே கேட்கவில்லை.
அதன்பின்னர் சுமார் 2 மணி நேரம் போராடி வார்டன் வெளியே வந்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
இரவு 7.30 மணிக்கு சிறுவர்கள் தப்பிய தகவல் 10 மணிக்கு தான் போலீசாருக்கு தெரியும் என்பதால் அதற்குள் சிறுவர்கள் பஸ், ரெயில் மூலம் வெளியூர் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற நோக்கத்தில் கோவையில் உள்ள பஸ் நிலையங்களில் போலீசார் இரவு முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
ஆனால் அவர்கள் யாரும் சிக்கவில்லை. கூர் நோக்கு இல்லத்தில் இருந்து 6 சிறுவர்கள் தப்பிச் சென்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story