கந்தம்பாளையம் அருகே டிராக்டர் டிரெய்லர், மாடுகள் திருடிய 2 பேர் கைது
கந்தம்பாளையம் அருகே டிராக்டர் டிரெய்லர், மாடுகள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கந்தம்பாளையம்:
கந்தம்பாளையம் அருகே டிராக்டர் டிரெய்லர், மாடுகள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தண்ணீர் ‘டேங்க்’
கந்தம்பாளையம் அருகே மணியனூர் உலக பாளையம் நாவிதன் தோட்டத்தில் வசித்து வருபவர் தர்மலிங்கம் (வயது 64). விவசாயியான இவர் டிராக்டரில் டேங்க் இணைத்து தண்ணீர் வினியோகம் செய்தும் வந்தார். கடந்த மாதம் 26-ந் தேதி இரவு அவரது தோட்டத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரில் இணைத்திருந்த தண்ணீர் டேங்க் மட்டும் மர்ம நபர்களால் திருடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து நல்லூர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், மணியனூரில் நல்லூர் போலீசார் வாகன சோதனை செய்தபோது டிராக்டரில் தண்ணீர் டேங்க் இணைப்புடன் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக கூறினர்.
2 பேர் கைது
உடனே அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், கரிச்சிபாளையம் வைரம் பாளையத்தை சேர்ந்த கணபதி (61) என்பதும், விவசாயியான இவர் சொந்தமாக டிராக்டர் வைத்துள்ளதும் தெரியவந்தது. மற்றொரு நபர், செருக்கலையை சேர்ந்த பாலுசாமி (50) என்பதும், இவர் சொந்தமாக டிராக்டர் வைத்திருப்பதும் தெரியவந்தது.
இவர்கள் இருவரும் தர்மலிங்கம் தோட்டத்தில் இருந்த தண்ணீர் டேங்கை, தங்களின் டிராக்டர் மூலம் திருடிச்சென்றதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பின்புறம் உள்ள சரவணன் என்பவரின் தோட்டத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரின் பின்புறமுள்ள டிரெய்லரையும், கோலாரம் வைரம் பாளையத்தில் ராஜவேல் (45) என்பவரின் தோட்டத்தில் கட்டி வைத்திருந்த ஒரு சிந்து மாடு, 2 கன்றுக்குட்டிகள் ஆகியவற்றை திருடிச் சென்றதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் திருட்டுக்கு பயன்படுத்திய 2 டிராக்டர்கள் மற்றும் டிராக்டர் டிரெய்லர், தண்ணீர் டேங்க் மற்றும் மாடு, கன்றுக்குட்டிகளை போலீசார் மீட்டனர்.
Related Tags :
Next Story