பறக்கும் படையினர் ரூ.10 லட்சத்திற்கு மேல் பறிமுதல் செய்யும்போது வருமான வரித்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்
பறக்கும் படையினர் ரூ.10 லட்சத்திற்கு மேல் பறிமுதல் செய்யும்போது வருமான வரித்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கோவை,
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் செலவின பார்வையாளர்களாக அமிதாப் ஷா, மகேஷ் ஜிவாடே, விஜய் குமார் சிங், ஷஷாங் திவேதி, ஹித்தேந்திர பவுராவ்ஜி, ராம்கிருஷ்ண் கேடியா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் கலெக்டர் ராஜாமணி மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் உரியவாறு கணக்கில் கொண்டு வரப்பட வேண்டும். வேட்பாளர்கள், வேட்பு மனு தாக்கல் செய்யும் வரை ஆகும் செலவினங்கள் தொடர்புடைய கட்சியின் கணக்கில் வைக்க வேண்டும், வேட்பாளர், வேட்பு மனு தாக்கல் செய்தவுடன், செலவினங்களை வேட்பாளர் கணக்கில் சேர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
பறக்கும் படை அலுவலர்கள், வேட்பாளர்களின் செலவினங்களை கண்காணித்திட நியமிக்கப்பட்ட குழுக்கள், இப்பணியினை முறையாக கண்காணித்திட தெரிவிக்கப்பட்டது. வேட்பாளர்கள், இதற்கென புதிய வங்கிக் கணக்கு ஆரம்பித்து அதன் மூலமே செலவினங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதற்கான இரசீதுகளை ஆய்வின் போது காண்பிக்க வேண்டும்.
வங்கிகள், அதிக அளவிளான பணப் பரிவர்த்தனை விவரங்களையும், ரூ.1 லட்சத்திற்கும் மேல் நடைபெறும் பணப்பரிவர்த்தனைகளை மாவட்ட தேர்தல் அலுவலருக்கு பட்டியலாக அனுப்ப வேண்டும்.
ரூ.10 லட்சத்திற்கும் மேல் வங்கியிலிருந்து எடுக்கும் நிலையில் அந்த விவரத்தினை உடனடியாக மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஏ.டி.எம். எந்திரங்களில் பணம்வெளியில் எடுத்துச்செல்லும் போதும் அதன் சரித்தன்மையை ஆய்வு செய்திட வேண்டும்.
பறக்கும் படை அலுவலர்கள் ரூ.10 லட்சத்திற்கும் மேலான ரொக்கம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை பறிமுதல் செய்யும் போது அதன் விவரத்தினையும் வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
மதுபானங்கள் விற்பனை மற்றும் தேர்தலுக்காக மதுபானங்கள் பயன்படுத்தப்படுகிறதா எனவும் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும் என தேர்தல் செலவின பார்வையாளர்கள் அறிவுறுத்தினர்.
Related Tags :
Next Story