பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்- அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா


பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்- அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா
x
தினத்தந்தி 14 March 2021 4:44 PM IST (Updated: 14 March 2021 4:47 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் அறிவுறுத்தி உள்ளார்.

கோவை,

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. அப்போது நாள் ஒன்றுக்கு 500 முதல் 600 பேர் வரை பாதிக்கப்பட்டனர். 

பின்னர் அதிகாரிகளின் தீவிர நடவடிக்கையால் கொரோனா பரவல் குறைந்தது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100-க்கும் கீழ் சென்றது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50-க்கும் கீழ் குறைந்தது.

ஆனால் தற்போது கோவையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மாவட்டத்தில் நேற்று புதிதாக 54 பேருக்கு தொற்று ஏற்பட்டது. 

கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று அரசு டாக்டர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்ததற்கு முக்கிய காரணம் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து ஒத்துழைப்பு கொடுத்ததுதான். 

ஆனால் தற்போது கொரோனா குறித்த அச்சம் இல்லாததால் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரிகிறார்கள். 
இதன் காரணமாகவே கோவையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க காரணம்.

எனவே பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, பொதுஇடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி சோப்பு அல்லது கிருமி நாசினியால் கைகளை நன்றாக கழுவ வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story